எதற்கெடுத்தாலும் பாகிஸ்தானையே சொல்கிறீர்களே, நீங்கள் இந்திய பிரதமரா அல்லது பாகிஸ்தான் தூதரா? என்று பிரதமர் மோடியை மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மேற்குவங்கத்தில் அம்மாநில முதல்வரும், திரிணாமுல் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி பேரணிகளை நடத்தி வருகிறார். அவர் நேற்று சிலிகுரியில் நடந்த பேரணியில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் கடந்த பின்பும், இந்நாட்டு மக்கள் தங்கள் குடியுரிமையை காட்ட வேண்டியிருப்பது அவமானம். இந்தியா சிறந்த கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் கொண்டது. நமக்கு பாகிஸ்தான் தேவையில்லை. இந்துஸ்தான் தேவை.ஆனால், பிரதமர் மோடி எதற்கெடுத்தாலும் பாகிஸ்தானைத்தான் கூறுகிறார். நீங்கள் இந்தியப் பிரதமரா? அல்லது பாகிஸ்தான் தூதரா? யாராவது வேலை கேட்டால், அதற்கும் பாகிஸ்தானைத்தான் பதிலாக தருகிறார். தொழிற்சாலைகளை பற்றி கேட்டால், அதற்கும் பாகிஸ்தானை சொல்கிறார்.
நாம் இந்தியாவைப் பற்றித்தான் பேச வேண்டும். அந்த நாட்டைப் பற்றி பேசுவதற்கு அங்கு மக்கள் இருக்கிறார்கள். இதுதான் நமக்கு சொந்த நாடு. இதைப் பற்றி மட்டுமே நாம் பேச வேண்டும்இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.
பிரதமர் மோடி நேற்று பேசுகையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடுபவர்கள், பாகிஸ்தானில் சிறுபான்மை மக்களுக்கு ஏற்படுத்தப்படும் கொடுமைகள் குறித்து குரல் எழுப்ப தயாரா? என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாகவே மம்தா பேசியுள்ளார்.