டாடா குழுமத்தின் தலைவர் பதவியை மீண்டும் ஏற்க விரும்பவில்லை என்று சைரஸ் மிஸ்திரி கூறியுள்ளார்.
பிரபல தொழில் குழும நிறுவனமான டாடா சன்ஸ், பல்வேறு துறைகளில் தொழிற்சாலைகளை நடத்தி வருகிறது. உப்பு முதல் பல்வேறு நுகர்பொருட்கள் தயாரிப்பு மற்றும் டி.சி.எஸ் போன்ற கம்ப்யூட்டர் சாப்ட்வேர் வரை பல தொழில்களில் ஈடுபட்டு வருகிறது.
இக்குழுமத்தின் தலைவராக இருந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா, கடந்த 2012ல் ஓய்வு பெற்றார். இதையடுத்து, நிர்வாகத் தலைவராக சபோர்ஜி பலோன்ஜி தொழில் குழுமத்தைச் சேர்ந்த சைரஸ் மிஸ்திரி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். டாடா சன்ஸ் குழுமத்தில் இவருக்கு வெறும் 18.37 சதவீத பங்குகளே உள்ளன. எனினும், இவரை ரத்தன் டாடாவே தலைவராக தேர்வு செய்தார். ஆனால், 4 ஆண்டுகளில் இவரை பதவிநீக்கம் செய்து டாடா குழுமத்தின் இயக்குனர்கள் குழு தீர்மானம் நிறைவேற்றியது.
இதன்பின், ரத்தன் டாடா தற்காலிக தலைவராக பொறுப்பேற்றார். தொடர்ந்து, புதிய நிர்வாக தலைவராக நடராஜன் சந்திரசேகரன் தேர்வு செய்யப்பட்டார். அவர் தற்போது அந்த பதவியில் இருந்து வருகிறார்.
இதற்கிடையே தன்னை நீக்கி இயக்குனர்கள் குழு எடுத்த முடிவை எதிர்த்து சைரஸ் மிஸ்தி, தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 18ம் தேதி, மிஸ்திரிக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானது. அவரை பதவிநீக்கம் செய்தது செல்லாது என்று தீர்ப்பு கூறப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து டாடா சன்ஸ், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது.
இந்நிலையில், சைரஸ் மிஸ்திரி கூறுகையில், தீர்ப்பாயத்தில் பல்வேறு ஆவணங்களையும் ஆய்வு செய்து எனக்கு சாதகமாக தீர்ப்பு வந்திருக்கிறது. ஆனாலும், நான் மீண்டும் டாடா சன்ஸ் குழுமத் தலைவராகவோ, அல்லது இயக்குனராகவோ நுழைய விரும்பவில்லை. அதே சமயம், எங்களிடம் உள்ள குறைந்த சதவீதப் பங்குகளின் உரிமைகளை எந்தவிதத்திலும் விட்டு கொடுக்காமல் தீவிரம் காட்டுவோம். கம்பெனியின் நலனை கருத்தில் கொண்டு, நான் இந்த முடிவை எடுத்துள்ளேன் என்று தெரிவித்தார்.