ராகுல்காந்தி மீண்டும் காங்கிரஸ் தலைவராகிறார்

by எஸ். எம். கணபதி, Jan 6, 2020, 07:09 AM IST

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக ராகுல்காந்தி மீண்டும் பொறுப்பேற்பார் என்று பேசப்படுகிறது.

கடந்த 2004ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்த காங்கிரஸ், 2014ம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்தது. பாஜக மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்தது. பிரதமராக மோடி பதவியேற்றார். இதன் தொடர்ச்சியாக, பாஜக தலைவராக அமித்ஷா பொறுப்பேற்றார். இதன்பிறகு பல மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சியமைக்க முடியாவிட்டாலும், கோவா, மணிப்பூர், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் எம்.எல்.ஏ.க்களை வளைத்து ஆட்சியைப் பிடித்தது.


இதற்கு பிறகு கடந்த மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, 303 இடங்களில் வெற்றி பெற்று மிகப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைத்தது. பல மாநிலங்களில் வாக்கு எந்திரங்களில் முறைகேடு செய்து பாஜக வெற்றி பெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினாலும், அவற்றால் மோடி-அமித்ஷா கூட்டணியை மீறி எதுவும் செய்ய இயலவில்லை.


இந்நிலையில், காங்கிரஸ் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 45 இடங்களை மட்டுமே கைப்பற்றி படுதோல்வி அடைந்தது. அது மட்டுமல்ல, கட்சியின் தலைவரான ராகுல்காந்தி, தான் போட்டியிட்ட அமேதி தொகுதியில் ஸ்மிரிதி இரானியிடம் தோற்றார். அதே சமயம், அவர் கடைசி நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்த கேரளமாநிலம் வயநாடு தொகுதியில் பிரம்மாண்ட வெற்றி பெற்றார்.


ஆனாலும், காங்கிரசின் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். இதையடுத்து மூத்த தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று சோனியா காந்தி தற்காலிக தலைவராக பொறுப்பேற்றார். எனினும், அவரால் முழு நேர அரசியலில் தீவிரமாக ஈடுபட முடியவில்லை.


இந்த சூழலில், தற்போது குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை காங்கிரஸ் நடத்தி வருகிறது. இதற்கு சிறுபான்மையினர் மற்றும் இளைஞர்களிடம் அதிக ஆதரவு கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த போராட்டங்களை ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் முன்னெடுத்து நடத்தி வருகின்றனர்.


மேலும், உ.பி.யில் நடந்த போராட்டங்களில் கலவரம் ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் வீடுகளுக்கு பிரியங்கா காந்தி, போலீஸ் அனுமதியை மீறிச் சென்று அந்த குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், தொடர்ந்து உ.பி.க்கு சென்று பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று வருகிறார்.


இந்நிலையில், ராகுல்காந்தி மீண்டும் தலைவராக வேண்டுமென்று கட்சிக்குள் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இவ்வளவு நாளாக இதை ஏற்க மறுத்த ராகுல்காந்தியும் தற்போது தலைமை ஏற்க ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. அதே சமயம், பிரியங்கா காந்தி தொடர்ந்து பொதுச் செயலாளராகவே நீடிப்பார். அவர் உ.பி.யில் வரும் 2022ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வருவதற்காக இப்போதிருந்தே தீவிரமாக செயல்பட்டு வருகிறார். உ.பி.யில் கடந்த 1989ம் ஆண்டுக்கு பிறகு காங்கிரஸ் ஆட்சிக்கு வரவே முடியவில்லை என்பதுடன் கட்சியும் கரைந்து போய் விட்டது. இந்நிலையில், அங்கு பிரியங்கா காந்தி கட்சியை பலப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

READ MORE ABOUT :

Speed News

 • மும்பையில் கொரோனாவுக்கு

  நேற்று 36 பேர் உயிரிழப்பு

  நாட்டிலேயே மும்பை, சென்னை, டெல்லி ஆகிய  பெருநகரங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மும்பையில் நேற்று புதிதாக 903 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 77,197 ஆக உயர்ந்தது. இதில் 44170 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று மட்டும் கொரோனா நோயாளிகள் 36 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து கொரோனா பலி 4514 ஆக உயர்ந்துள்ளது. 

  Jul 1, 2020, 13:53 PM IST
 • டெல்லியில் 87 ஆயிரம் பேருக்கு

  கொரோனா பாதிப்பு

  டெல்லியில் நேற்று புதிதாக 2179 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இத்துடன் இங்கு கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 87,360 ஆக உயர்ந்துள்ளது. இதில் 58,348 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று பலியான 62 பேரையும் சேர்த்து மொத்த உயிரிழப்பு 2741 ஆக உள்ளது.

  Jul 1, 2020, 13:45 PM IST
 • மகாராஷ்டிராவில் ஒரே நாளில்

  4878 பேருக்கு கொரோனா

  நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில்தான் கொரோனா பாதித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 4878 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வரை மொத்தம் ஒரு லட்ச்த்து 74,761 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. இதில் 90,911 பேர் குணம் அடைந்துள்ளனர். இ்ம்மாநிலத்தில் 9 லட்சத்து 66,723 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

  Jul 1, 2020, 13:43 PM IST
 • ராஜஸ்தானில் 18 ஆயிரம் பேருக்கு

  கொரோனா தொற்று பாதிப்பு

  ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இந்த மாநிலத்தில் நேற்று 354 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. இது வரை மொத்தம் 18,014 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது வரை 413 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். 

  ராஜஸ்தானில் இது வரை 8 லட்சத்து 24,213 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தனை சோதனைகளில் 18 ஆயிரம் பேருக்குத்தான் கொரோனா பரவியிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் 11 லட்சம் பரிசோதனைகள் செய்ததில் 90 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. அதே போல், தமிழகத்தில் கொரோனா பலியும் 1200 ஆக உள்ளது. 

  Jul 1, 2020, 13:40 PM IST
 • தந்தை, மகன் மரணம் குறித்த வழக்கு

  சி,பி.சி.ஐ.டி விசாரிக்க உத்தரவு

  சாத்தான்குளம் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மர்ம மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பான வழக்கு மதுரை ஐகோர்ட் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறுகையில், ‘‘இந்த 2 பேர் மரணம் தொடர்பான தடயங்களை மறைக்க வாய்ப்புள்ளதால்,  வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கத் தொடங்கும் வரை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர். 

  Jun 30, 2020, 13:33 PM IST