ஜே.என்.யூ. விடுதிக்குள் குண்டர்கள் புகுந்து மாணவர்கள் மீது கடும் தாக்குதல்

by எஸ். எம். கணபதி, Jan 6, 2020, 07:21 AM IST

டெல்லி ஜே.என்.யு. மாணவர்கள் விடுதிக்குள் முகமூடி அணிந்த குண்டர்கள் புகுந்து, மாணவர் சங்க நிர்வாகிகளை உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதற்கு ஏ.பி.வி.பி. சங்கத்தினர்தான் காரணம் என்று மாணவர் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.


டெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் மிகவும் பிரபலமானது. சமீபத்தில் நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி கூட இங்குதான் படித்தார். இந்த பல்கலைக்கழகத்தில் கட்டண உயர்வை எதிர்த்து ஜே.என்.யு. மாணவர் சங்கத்தினர் கடந்த சில வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விடுதியில் தங்கியுள்ள மாணவர்களும் உள்ளிருப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில், நேற்று மாலையில் பல்கலைக்கழகத்தின் சபர்மதி மாணவர்கள் விடுதிக்குள் திடீரென 10, 12 பேர் முகத்தை துண்டால் மூடிக் கொண்டு, உருட்டுக் கட்டைகளுடன் விடுதிக்குள் புகுந்தனர். அவர்கள் கண்மூடித்தனமாக மாணவர்களை கட்டையால் அடித்து தாக்கினர். குறிப்பாக, ஜே.என்.யு. மாணவர் சங்க நிர்வாகிகளை கடுமையாக தாக்கினர். இதில், மாணவர் சங்கத் தலைவர் ஆயிஷ் கோஷ் உள்பட பலருக்கும் மண்டை உடைந்தது.


இதையடுத்து, பல்கலைக்கழக பதிவாளர் பிரமோத் குமார், டெல்லி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். 7 ஆம்புலன்ஸ்கள் கொண்டு வரப்பட்டு காயமடைந்த மாணவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், 10 ஆம்புலன்ஸ்கள் கொண்டு வந்து அங்கு நிறுத்தப்பட்டன.
மாணவர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், பாஜக மாணவர் சங்கமான ஏ.பி.வி.பி. சங்கத்தைச் சேர்ந்தவர்கள்தான் குண்டர்களுடன் முகமூடி அணிந்து வந்து தாக்கியவர்கள் என்று குற்றம்சாட்டினர். இதையடுத்து, ஏ.பி.வி.பி. நிர்வாகிகள் தங்களை இடதுசாரி மாணவர் சங்கங்களை சேர்ந்து தாக்கியதாக குற்றம்சாட்டினர்.
இந்த சம்பவம் தொடர்பாக, கவர்னருடன் முதலமைச்சர் கெஜ்ரிவால் போனில் பேசி. உடனடியாக காவல் துறையை அனுப்பி நடவடிக்கை எடுக்க கோரினார். டெல்லி போலீசார் மத்திய அரசின் உள்துறை கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

READ MORE ABOUT :

More India News

அதிகம் படித்தவை