ஜே.என்.யு மாணவர் சங்கத் தலைவி மீது டெல்லி போலீஸ் வழக்கு

Delhi police filed case against JNU students president

by எஸ். எம். கணபதி, Jan 7, 2020, 11:13 AM IST

டெல்லி ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் தாக்கப்பட்ட மாணவர் சங்கத் தலைவி ஆயிஷ் கோஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


டெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின்(ஜே.என்.யு) சபர்மதி மாணவர்கள் விடுதிக்குள் கடந்த 5ம் தேதி மாலை திடீரென 10, 12 பேர் முகத்தை துண்டால் மூடிக் கொண்டு, உருட்டுக் கட்டைகளுடன் புகுந்தனர். அவர்கள் கண்மூடித்தனமாக மாணவர்களை கட்டையால் அடித்து தாக்கினர். குறிப்பாக, ஜே.என்.யு. மாணவர் சங்க நிர்வாகிகளை கடுமையாக தாக்கினர். இதில், மாணவர் சங்கத் தலைவி ஆயிஷ் கோஷ் உள்பட பலருக்கும் மண்டை உடைந்தது. காயமடைந்தவர்கள் உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.


இந்த தாக்குதலுக்கு பாஜகவின் மாணவர் சங்கமான ஏ.பி.வி.பி.யின் நிர்வாகிகளே காரணம் என்று ஜே.என்.யு மாணவர் சங்கம் குற்றம்சாட்டியது. அதே சமயம், தங்கள் நிர்வாகிகளை இடதுசாரி மாணவர் சங்கத்தினர் கடுமையாக தாக்கியதாக ஏ.பி.வி.பி மாணவர்கள் குற்றம்சாட்டினர்.


இந்நிலையில், மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலை கண்டித்து, கொல்கத்தா, மும்பை, புனே என்று பல நகரங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். தாக்கப்பட்டு சிகிச்சை பெற்ற ஆயிஷ் கோஷ் உள்ளிட்டோர், பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது புகார் கூறினர். மாணவர்கள் தாக்குதல் நடந்த போது போலீசாரை உள்ேள விடாமல் துணைவேந்தர் ஏன் காலதாமதம் செய்தார் என்றும் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், தாக்குதலுக்கு முதல் நாள்(ஜன.4), பாதுகாவலர்களை தாக்கி, கம்ப்யூட்டர் சர்வர் அறையை சூறையாடி விட்டதாக கூறி, ஆயிஷ் கோஷ் உள்பட 20 பேர் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பல்கலைக்கழக நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கை போலீசார் பதிவு செய்துள்ளனர்.

தாக்கப்பட்டவர் மீதே போலீசார் வழக்கு தொடுத்திருப்பது எதேச்சதிகாரமாக அடக்குமுறையை கையாளும் போக்கு என்று மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

You'r reading ஜே.என்.யு மாணவர் சங்கத் தலைவி மீது டெல்லி போலீஸ் வழக்கு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை