தமிழக சட்டசபையில் இருந்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் 2வது நாளாக இன்றும்(ஜன.7) வெளிநடப்பு செய்தனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. தமிழகத்தில் திமுக கூட்டணி போராட்டம் நடத்தி வருகிறது.
மேலும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஒரு தீர்மானத்தை சட்டசபையில் திமுக கொடுத்திருக்கிறது. இது பற்றி பேசுவதற்கு அனுமதி தராததால், திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக், மனிதநேய ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் நேற்று ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில், சட்டசபை 2வது நாளாக இன்று கூடியது. முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் உள்பட மறைந்தவர்களுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு சிறிது நேரம் மட்டும் அவை ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியதும், குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மீதான தீர்மானத்தை விவாதிக்க வேண்டுமென்று சபாநாயகரிடம் திமுக, காங்கிரஸ் கோரிக்கை விடுத்தன. சபாநாயகர் தனபால் அதை ஏற்கவில்லை. இதையடுத்து, திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். இதன் பின்னர், சபைக்கு வெளியே திமுக தலைவர் ஸ்டாலின், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளோம். ஆனால், அந்த தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட வாய்ப்பில்லை என்று தெரிய வந்துள்ளது. எங்களது கோரிக்கை குறித்து சட்டப் பேரவையில் பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி மறுப்பதால் வெளிநடப்பு செய்துள்ளோம்.இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.