டெல்லி ஜே.என்.யு மாணவர்கள் மீது நாங்கள்தான் தாக்குதல் நடத்தினோம் என்று இந்து அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது.
டெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின்(ஜே.என்.யு) சபர்மதி மாணவர்கள் விடுதிக்குள் கடந்த 5ம் தேதி மாலை திடீரென 30 பேர் முகத்தை துண்டால் மூடிக் கொண்டு, உருட்டுக் கட்டைகளுடன் புகுந்தனர். அவர்கள் கண்மூடித்தனமாக மாணவர்களை கட்டையால் அடித்து தாக்கினர். குறிப்பாக, ஜே.என்.யு. மாணவர் சங்க நிர்வாகிகளை கடுமையாக தாக்கினர். இதில், மாணவர் சங்கத் தலைவி ஆயிஷ் கோஷ் உள்பட பலர் காயமடைந்தனர். தாக்குதல் குறித்து பாஜகவின் மாணவர் சங்கமான ஏ.பி.வி.பி.யும், இடதுசாரி சங்கமான எஸ்.எப்.ஐ.யும் மாறி, மாறி குற்றம்சாட்டி வந்தன.
இந்நிலையில், இந்து ரக்ஷா தளம் என்ற அமைப்பு, தாங்களே ேஜ.என்.யு மாணவர்களை தாக்கியதாக பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பின் தலைவர் பிங்கி சவுத்ரி, ஏஎன்ஐ நிருபரிடம் கூறுகையில், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் சமூக விரோத செயல்பாடுகளுக்கான புகலிடமாக மாறி விட்டது. இதை பார்த்து கொண்டு நாம் சும்மா இருக்க முடியாது. எங்களால் இதை பொறுத்து கொள்ள முடியவில்லை. எங்கள் இயக்கத்தினர்தான் அங்கு சென்று மாணவர்களை தாக்கினர் என்று கூறியிருக்கிறார்.
தற்போது இந்த அமைப்பினரிடம் விசாரணை நடத்தப் போவதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.