அசாமுக்கு மட்டும்தான் தேசிய குடிமக்கள் பதிவேடு.நிதிஷ்குமார் பேச்சு

by எஸ். எம். கணபதி, Jan 13, 2020, 22:32 PM IST

தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம்(என்.ஆர்.சி), அசாம் மாநிலத்திற்கு மட்டும்தான். பீகாரில் அந்த கேள்விக்கே இடமில்லை என்று அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.


பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. மத்திய பாஜக கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு(சி.ஏ.ஏ) நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் ஆதரவு அளித்து வாக்கு போட்டது.


இதற்கு பின், தேசிய மக்கள் தொகை பதிேவடு(என்.பி.ஆர்) தயாரிக்கும் திட்டத்தை தொடங்குவதற்கு மத்திய அரசு அறிவித்திருக்கிறது. தொடர்ச்சியாக, தேசிய குடிமக்கள் பதிவேடு(என்.ஆர்.சி) தயாிரக்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். அதே சமயம், என்.ஆர்.சி பற்றி இதுவரை விவாதிக்கவே இல்லை என்று பிரதமர் கூறியிருக்கிறார்.


இந்நிலையில், சி.ஏ.ஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகியவை குறித்து பீகார் சட்டசபையில் விவாதிக்க வேண்டுமென்று ஆர்ஜேடி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதற்கு பதிலளித்து முதல்வர் நிதிஷ்குமார் கூறுகையில், அசாம் மாநிலத்திற்கு மட்டும்தான் என்.ஆர்.சி செயல்படுத்தப்படும். மற்ற மாநிலங்களில் செயல்படுத்துவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்று பிரதமர் கூறியிருக்கிறார். பீகாரைப் பொறுத்தவரை என்.ஆர்.சி என்ற கேள்விக்கே இடமில்லை என்று தெரிவித்தார்.
துணைமுதல்வராக உள்ள சுஷில்குமார் மோடி, பீகாரில் என்.பி.ஆர் திட்டம், மே 15ம் தேதி தொடங்கப்பட்டு, மே28ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவித்திருந்தார். ஆனால், இது பற்றி நிதிஷ்குமார் எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




More India News