ஆம் ஆத்மி மீது ரூ.500 கோடி அவதூறு வழக்கு..பாஜக நோட்டீஸ்
Delhi BJP send Rs.500 crore defamation notice to AAP,
டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரியின் டான்ஸ் வீடியோவை தனது பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி மீது ரூ.500 கோடி அவதூறு வழக்கு தொடரவுள்ளதாக பாஜக கூறியுள்ளது.
டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சியின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. இதையடுத்து, அங்கு சட்டசபை பொதுத் தேர்தல் பிப்ரவரி 8ல் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை பிப்.11ம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் நாளை தொடங்கவுள்ளது. ஆம் ஆத்மி கட்சி, ஆட்சியை தக்க வைக்க தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. பாஜக, காங்கிரஸ் கட்சிகள், டெல்லியில் ஆட்சியைப் பிடிக்க மும்முரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில், டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரியின் பழைய போஜ்புரி டான்ஸ் வீடியோவை எடுத்து, அதை ஆம் ஆத்மி பிரச்சாரப் பாடலுக்கு பயன்படுத்தி ஒரு வீடியோவை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டிருக்கிறது. இதையடுத்து, இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி மீது ரூ.500 கோடி இழப்பீடு கேட்டு அவதூறு வழக்கு தொடரப் போவதாக டெல்லி பாஜக தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கட்சி இது வரை பதிலளிக்கவில்லை.