சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயது வரையான பெண்களுக்கு நீண்ட காலமாக அனுமதி வழங்கப்படவில்லை.
ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டுமென்று கோரி தொடரப்பட்ட மறு ஆய்வு மனுக்களை கடைசியாக, சுப்ரீம் கோர்ட்டில் முந்தைய தலைமை நீதிபதி ரஞ்சன்கோகய், நீதிபதிகள் நரிமன், கன்வில்கர், சந்திரசூட், இந்து மல்கோத்ரா ஆகியோர் விசாரித்தனர்.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நீதிபதிகள் கன்வில்கர், இந்து மல்கோத்ரா ஆகியோர் தனியாகவும், ரோகின்டன் பாலி நரிமன், சந்திரசூட் ஆகியோர் தனியாகவும் வேறுபட்ட தீர்ப்புகளை அளித்தனர். தலைமை நீதிபதி தலைமையிலான மெஜாரிட்டி தீர்ப்பில், பொது வழிபாட்டு தலங்களில் பெண்களை அனுமதிப்பது என்பது இந்த கோயிலுடன் முடிந்து விடாது. இப்பிரச்னை மசூதிகளுக்குள் பெண்களை அனுமதிப்பது, பார்சி பெண்களை அவர்களின் வழிபாட்டு தலங்களுக்கு அனுமதிப்பது போன்ற விஷயங்களையும் உள்ளடக்கும் என்பதால், இந்த வழக்கை அதிக நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற உத்தரவிடப்படுகிறது. அது வரை தற்போதைய நிலை தொடரும் என்று தீர்ப்பளித்தனர்.
இதன்பின்பு, சபரிமலை வழக்கில் 50க்கும் மேற்பட்ட மறு ஆய்வு மனுக்கள் வரை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையில் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தன. நீதிபதிகள் பானுமதி, அருண் பூஷண், நாகேஸ்வரராவ், மோகன் சந்தானகவுடர், அப்துல் மஸீர், சுதாஷ்ரெட்டி, பி.ஆர்.கவாய், சூரியகாந்த் ஆகிய நீதிபதிகள் அந்த அமர்வில் இடம் பெற்றனர்.
விசாரணையின் போது தலைமை நீதிபதி போப்டே கூறியதாவது:நாங்கள் அனைத்து மறுஆய்வு மனுக்களையும் விசாரிக்கப் போவதில்லை. ஏற்கனவே மறு ஆய்வு மனுக்கள் மீது 5 நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் எழுப்பப்பட்ட 7 கேள்விகளை பற்றி மட்டுமே விசாரணை நடத்துவோம். இது தொடர்பாக வழக்கறிஞர்கள் தங்களுக்குள் 3 வாரங்களுக்குள் இறுதி முடிவெடுத்து வாதங்களை தொடங்கலாம். ஏற்கனவே அயோத்தி வழக்கில் எப்படி இறுதி வாதங்கள் எடுத்து கொள்ளப்பட்டதோ, அதே போல் வழக்கின் முக்கிய கேள்விகளை தயார் செய்து அவற்றை விசாரிப்போம்.
இவ்வாறு தலைமை நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து, இருதரப்பு வழக்கறிஞர்களும் 17ம் தேதி கூடி விவாதித்து, வழக்கில் எழும் சந்தேகங்களை தயாரித்து வழக்கு விசாரணைக்கு உதவுவார்கள் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.