தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட வில்சனின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி!முதல்வர் வழங்கினார்

by எஸ். எம். கணபதி, Jan 13, 2020, 22:14 PM IST
Share Tweet Whatsapp

தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட எஸ்.ஐ. வில்சனின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.


கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் உள்ள சோதனைச் சாவடியில் ஜன.8ம் தேதி இரவு பணியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வில்சன் இருந்தார். இரவு 9 மணியளவில் ஒரு ஸ்கார்பியோ காரில் வந்த 2 இளைஞர்கள் கைத்துப்பாக்கியால் வில்சனை 3 முறை சுட்டனர். சத்தம் கேட்டு மற்ற காவலர்கள் வருவதற்குள் அந்த இளைஞர்கள் வேகமாக ஓடிச் சென்று காரில் ஏறி தப்பி விட்டார்கள். காயமடைந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் வில்சனை சுட்டுக் ெகான்றவர்கள் தீவிரவாதிகள் என்று தெரிய வந்தது. ஒருவர் குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டைச் சேர்ந்த அப்துல் சமீம் என்பதும், மற்றொருவர் நாகர்கோவில் இளங்கடையைச் சேர்ந்த தவுபிக் என்பதும் தெரியவந்தது.


இந்நிலையில், வில்சனின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, இன்று(ஜன.13) காலை சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வில்சனின் மனைவியிடம் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. வில்சனின் மனைவி மற்றும் 2 மகள்களிடம் ரூ.1 கோடி நிதிக்கான காசோலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய்சுந்தரம் உடனிருந்தார்.


READ MORE ABOUT :

Leave a reply