ஜிசாட்-30 செயற்கைகோள் பிரஞ்ச் கயானாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது

by எஸ். எம். கணபதி, Jan 18, 2020, 11:48 AM IST

இஸ்ரோவின் ஜிசாட் 30 செயற்கைக்கோள் நேற்று பிரெஞ்ச் கயானாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்திய விண்வெளிக் கழகம்(இஸ்ரோ), தகவல் தொடர்பு சேவைகளுக்கு தொடர்ந்து அதிநவீன செயற்கைக்கோள்களை தயாரித்து விண்ணில் செலுத்தி வருகிறது. இந்த வரிசையில், தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட்-30 செயற்கைக்கோள் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு பிரெஞ்ச் கயானாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

ஐரோப்பிய விண்வெளி முகமையின் ஏரியேன் - 5 ராக்கெட் மூலம் ஜிசாட் 30 விண்ணில் ஏவப்பட்டது. ஒளிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பயன்படும் வகையில், இன்சாட்-4ஏ செயற்கைக்கோளுக்கு பதிலாக ஜிசாட்-30 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. மொத்தம், 3,357 கிலோ எடையுள்ள, ஜிசாட்-30 செயற்கைக்கோள், தொலைதொடர்பு, டி.டி.எச். மற்றும், டிஜிட்டல் சேவைகளுக்கு உதவும். இந்த செயற்கைக்கோள் 15 ஆண்டுகள் இயங்கும் வகையில் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது பற்றி, இஸ்ரோ தலைவர் சிவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜிசாட்-30 செயற்கைகோளில் உள்ள கியூ பாண்ட் மூலம் இந்தியா மற்றும் இதையொட்டிய தீவுகள், சி பாண்ட் மூலமாக வளைகுடா நாடுகள், ஆசிய நாடுகள், ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளுக்கு அதிவேக தகவல் தொடர்பு சேவைகளை வழங்கும். இந்த செயற்கைகோள் டி.டி.எச் சேவைகள், ஏ.டி.எம். எந்திரங்களுக்காக விசாட் இணைப்பு ஏற்படுத்துவது, டெலிவிஷன் அப்லிங்கிங், டெலிபோர்ட் சேவைகள் மற்றும் மின்னணு நிர்வாக செயலிகள் செயல்படவும் உதவும். இவ்வாறு சிவன் தெரிவித்துள்ளார்.


More India News