1350 எம்.பி.க்கள் அமரும் புதிய நாடாளுமன்ற கட்டிடம், 2024க்குள் கட்டி முடிக்க திட்டம்

New Parliament complex with 1350 members

by எஸ். எம். கணபதி, Jan 19, 2020, 09:12 AM IST

வரும் 2024ம் ஆண்டுக்குள் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த புதிய நாடாளுமன்றத்தில் 1350 உறுப்பினர்கள் அமரும் வகையில் இருக்கை வசதிகள் செய்யப்படுகின்றன.

புதுடெல்லியில் நாடாளுமன்றக் கட்டிடம் உள்ளது. மிகப் பெரிய வளாகமாக இருந்தாலும், மக்களவை அரங்கு, மாநிலங்களவை அரங்கு ஆகியவை இடநெருக்கடியாகவே உள்ளன. இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடத்தப்படும் மைய மண்டபமும் போதிய வசதிகளுடன் இல்லை. இதனால், எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்தே இது பற்றி பேசப்பட்டாலும், மோடி அரசு பதவியேற்ற பின்பு 2022க்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது. தற்போது புதிய வடிவமைப்புகளுடன் 2024க்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இதற்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த ஹெச்.சி.பி. டிசைன்ஸ் நிறுவனம் வடிவமைப்புகளை தயார் செய்துள்ளது.

இதன்படி, தற்போதைய நாடாளுமன்றக் கட்டிடம் அருகேயே புதிய கட்டிடம் முக்கோண வடிவில் கட்டப்படும். மக்களவையில் 900 உறுப்பினர்கள் அமரும் வகையில் இருக்கை வசதி செய்யப்படும். கூட்டு கூட்டம் நடத்துவதற்கு அதிகபட்சமாக 1350 உறுப்பினர்கள் அமரும் வகையில் இருக்கை வசதிகள் செய்யப்படுகிறது.

தற்போதுள்ள நாடாளுமன்ற அரங்குகளில் நீண்ட வரிசையில் இருக்கைகள் உள்ளதால், ஒரு உறுப்பினர் தனது இருக்கைக்கு செல்வதற்கு மற்றவர்களை இடித்து கொண்டு செல்ல வேண்டியுள்ளது. புதிய கட்டிடத்தில் அப்படியிருக்காது. இரண்டு, இரண்டு இருக்கைகளாக அமைக்கப்படுவதால், எளிதாக சென்று வரலாம்.

நாடாளுமன்ற வளாகத்தில் புதிய அருங்காட்சியகம், மத்திய அரசின் ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம் போன்றவையும் இடம்பெறுகின்றன. மேலும், புதிய கட்டிடடங்கள் கட்டப்படும் போது தற்போது இருப்பதை போலவே நார்த் பிளாக், சவுத் பிளாக் என்று கட்டப்படும். சவுத்பிளாக் பின்புறம் பிரதமரின் இல்லமும், நார்த் பிளாக் பின்புறம் துணை ஜனாதிபதி இல்லமும் கட்டப்படும். அத்துடன் நாடாளுமன்றத்திற்கு வெளியே புதிய ராஜபாதையும் ஏற்படுத்தப்படும்.

தற்போது மக்களவையில் 543 உறுப்பினர்கள் உள்ளனர். வரும் 2026ம் ஆண்டுக்குள் புதிய தொகுதிகள் பிரிக்கப்பட்டு இந்த எண்ணிக்கை 900ஐ எட்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டுதான் அதிக உறுப்பினர்கள் அமரும் வகையில் புதிய நாடாளுமன்றம் கட்டப்படவுள்ளது.

You'r reading 1350 எம்.பி.க்கள் அமரும் புதிய நாடாளுமன்ற கட்டிடம், 2024க்குள் கட்டி முடிக்க திட்டம் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை