சில நேரங்களில் தோல்வியே நமக்கு சிறந்த பாடமாக அமையும் என்றும், மாணவர்கள் தோல்வியில் இருந்து பாடம் கற்று வெற்றியை பெற வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் மாணவர்களிடையே பிரதமர் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி, இன்று காலை நடைபெற்றது. இதற்காக நாடு முழுவதிலும் இருந்து 2 ஆயிரம் மாணவர்களை டெல்லிக்கு வரவழைத்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்கச் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது:
சில சமயங்களில் தோல்வி தான் நமக்கு சிறந்த பாடமாக அமையும். சந்திரயான்-2 விண்ணில் ஏவப்படும் போது, சிலர் என்னிடம், நீங்கள் அங்கு செல்ல வேண்டாம், சில சமயங்களில் விண்வெளித் திட்டம் தோல்வியுறும். நீங்கள் சென்றிருக்கும் போது தோற்று விட்டால் என்ன செய்வது..? என்று ஆலோசனை கூறினர். ஆனால், நான் அங்கு செல்வதில் உறுதியாக இருந்தேன்.
சந்திரயான் 2 தோல்வியுற்ற போது நான் கவலைப்பட்டேன். ஆனால், சிறிது நேரத்தில் நான் விஞ்ஞானிகளை சந்தித்து ஆறுதல் கூறினேன். அவர்களின் கடுமையான உழைப்பை பாராட்டினேன். நாட்டின் கனவுகளை எடுத்து கூறினேன். நான் பேசியது அங்கு மட்டுமல்ல, நாடு முழுவதும் நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தியது. அதன்பிறகு ஏற்பட்ட வெற்றிகளை நீங்கள் அறிவீர்கள்.
எனவே, மாணவர்கள் தோல்வியைக் கண்டு துவளக் கூடாது. தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு வெற்றியை அடைய வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். மேலும், கிரிக்கெட் போட்டிகளில் இக்கட்டான நிலையில் ராகுல்டிராவிட், வி.வி.எஸ்.லட்சுமணன் ஆகியோர் நம்பிக்கையுடன் விளையாடி வென்றுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.