மக்கள்தொகை பதிவேடு தயாரிப்பு பணியை தொடங்கும் முன்பாக அதற்கான விதிமுறைகளை மாநில அரசுகள் கவனமாக ஆய்வு செய்ய வேண்டுமென்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
புதிதாக அமலுக்கு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தின்படி, ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான், வங்கசேதம் நாடுகளில் இருந்து வந்து 2014க்கு முன்பு இந்தியாவில் குடியேறிய முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கு குடியுரிமை தரப்படும்.
இது நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிரானது என்று கூறி, ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு போட்டியாக பாஜகவினர், அந்த சட்டத்திற்கு ஆதரவு கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறக் கோரி, இடதுசாரிகள் ஆளும் கேரளாவில் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், மேற்குவங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, இன்று(ஜன.20) நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:
குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வலியுறுத்தி, அனைத்து மாநிலங்களும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதே போல், தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிப்பு பணியை தொடங்குவதற்கு முன்பாக மாநில அரசுகள், அந்த விதிமுறைகளை கவனமாக ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்களும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களும் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார்.