புதுடெல்லி சட்டசபை தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால் வேட்புமனு தாக்கல் செய்தார்.
டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெறுகிறது. இதன் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. இதையடு்த்து, பிப்ரவரி 8ம் தேதி டெல்லி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான கெஜ்ரிவால், புதுடெல்லி சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக, பகல் 12 மணியளவில் கன்னாட்பிளேஸ் பகுதியில் இருந்து ஆம் ஆத்மி கட்சியினர் பிரமாண்ட பேரணி நடத்தினர். இதில் திறந்த ஜீப்பில் கெஜ்ரிவால் வந்தார். பேரணி படேல் சவுக் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் முடிந்தது.
இதன்பின், ஜாம்நகரில் உள்ள தொகுதி தேர்தல் அதிகாரியிடம் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. கெஜ்ரிவாலுக்கு அவரது மனைவி சுனிதா, மகள் ஹர்ஷிதா, மகன் புல்கித் ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் செய்கின்றனர்.