டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக் கோரி ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் சில இடைத்தரகர்கள், தேர்வு நடத்தும் அதிகாரிகளுடன் ரகசிய கூட்டு வைத்து செயல்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 99 பேரின் விடைத்தாள்களில் திருத்தம் செய்து மாற்று விடைகளைக் குறித்து, அவற்றை விடைத்தாள் கட்டுகளில் சேர்த்து வைத்தது தெரிய வந்துள்ளது. அந்த 99 பேரில் 39 பேர் தரவரிசை பட்டியலில் முதல் 100 இடத்திற்குள் வந்துள்ளனர்.
இதையடுத்து, டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார், சார்புச் செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த முறைகேடு வழக்கில் இடைத்தரகர்கள், முறைகேடு செய்து தேர்வு எழுதி தேர்வானவர்கள் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விடைத்தாள்களை திருத்திய முக்கிய குற்றவாளி ஜெயக்குமார் தலைமறைவாக உள்ளார். சி.பி.சி.ஐ.டி போலீசார் அவரை வலை வீசி தேடி வருகிறார்கள்.
இந்நிலையில் குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி போலீசிடம் இருந்து சி.பி.ஐ.க்கு மாற்ற உத்தரவிக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் நீலமேகம் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு மட்டுமின்றி, காவலர் தேர்விலும் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அதிகமாக தேர்வாகி இருக்கிறார்கள். அதிலும் முறைகேடு நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. குரூப் 2 தேர்விலும் முறைகேடாக பலர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளி வந்துள்ளன. எனவே, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்தால் பல விஷயங்கள் மறைக்கப்படலாம். முழு உண்மை வெளியே வராது. எனவே, வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். மேலும் சி.பி.ஐ. விசாரணையை உயர்நீதிமன்ற நீதிபதி கண்காணிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.