டெல்லி பலாத்கார வழக்கில் குற்றவாளி முகேஷ் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

by எஸ். எம். கணபதி, Jan 29, 2020, 15:16 PM IST

டெல்லி இளம்பெண் பலாத்கார வழக்கில் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து குற்றவாளி முகேஷ் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு துணை மருத்துவம் படித்து கொண்டிருந்த இளம் பெண்ணை ஓடும் பஸ்சில் 6 பேர் பலாத்காரம் செய்து தூக்கி வீசிவிட்டு சென்றனர். அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் உயிரிழந்தார். போலீசார் புலன்விசாரணை நடத்தி, பலாத்காரம் செய்த 6 பேரையும் கைது செய்தனர். அவா்களில் ஒருவன் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். இன்னொருவன் சிறுவன் என்பதால் 3 ஆண்டு சிறார் பாதுகாப்பு இல்லத்தில் வைக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டான்.

அந்த பெண்ணின் அடையாளம் மறைக்கப்பட்டு, நிர்பயா என்று பெயரிடப்பட்டு, பலாத்கார வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. வழக்கில் மற்ற குற்றவாளிகள் முகேஷ் சிங், வினய் சா்மா, அக்சய்குமார், பவன் குப்தா ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பை டெல்லி ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தன.

இதையடுத்து, குற்றவாளிகளுக்கு, ஜன. 22ம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்றுமாறு திகார் சிறை அதிகாரிகளுக்கு விசாரணை நீதிமன்றம் கடந்த 7ம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில், குற்றவாளி முகேஷ், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பினான்.

அந்த மனுவை ஜனாதிபதி நிராகரித்து உத்தரவிட்டார். இதையடுத்து, ஜனாதிபதியின் உத்தரவை எதிர்த்து முகேஷ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை அவசர வழக்காக எடுத்து சுப்ரீம் கோர்ட் விசாரித்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷன், போபன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று(ஜன.29) காலை தீர்ப்பளித்தது. தீர்ப்பில் கூறப்பட்டதாவது:
மனுதாரர் தான் சிறைக் காவலில் ெகாடுமைப்படுத்தப்பட்டதாக கூறியிருக்கிறார். இது பற்றி, தான் கருணைமனுவில் குறிப்பிட்டிருந்த விஷயங்களை ஜனாதிபதி கருத்தில் கொள்ளவில்லை என்றும் கூறியிருக்கிறார். ஆனால், ஜனாதிபதியின் பார்வைக்கு அனைத்து தகவல்களும் அனுப்பப்பட்டிருக்கின்றன. அவர் அனைத்தையும் பரிசீலித்த பின்புதான் உத்தரவிட்டிருக்கிறார். மேலும், கொடுமைப்படுத்தப்பட்டதை தண்டனைக் குறைப்புக்கு ஒரு காரணமாக எடுத்துகொள்ள முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

இதையடுத்து, குற்றவாளிகளுக்கு தூக்குதண்டனை நிறைவேற்றும் தேதி விரைவில் நிர்ணயிக்கப்படும் என கூறப்படுகிறது.

You'r reading டெல்லி பலாத்கார வழக்கில் குற்றவாளி முகேஷ் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை