தேசிய மக்கள்தொகை பதிவேடு(என்பிஆர்) தயாரிப்பு பணியை காங்கிரஸ் ஆட்சி காலத்து முறையிலேயே மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசுக்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய பாஜக அரசு, சமீபத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றியது. இந்த சட்டத்தின்படி, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கனிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவில் தஞ்சம் அடைந்த முஸ்லிம் அல்லாத மதத்தினருக்கு குடியுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மதரீதியாக மக்களை பிளவுபடுத்தும் என்று கூறி, எதிர்க்கட்சிகள் பெரும் போராட்டங்களை நடத்தின. மாணவர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், மத்திய அரசு அடுத்தகட்டமாக தேசிய மக்கள்தொகை பதிேவடு(என்பிஆர்) தயாரிக்கும் பணியை மேற்ெகாள்ள அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே 2011ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியிலேயே இப்பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், தற்போது அதில் சில புதிய விதிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதாவது, பெற்றோர் பிறந்த இடம், பிறந்த தேதி கேட்கப்படுகிறது. மேலும், என்பிஆரைத் தொடர்ந்து தேசிய குடிமக்கள் பதிவேடு(என்ஆர்சி) தயாரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இது தற்போது சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளது.
அதாவது, பெற்றோர் பிறந்த இடம், தேதியை சொல்ல முடியாதவர்களில் முஸ்லிம்களுக்கு மட்டும் குடியுரிமை பறிக்கப்படும் என்றும், மற்றவர்களுக்கு குடியுரிமை திருத்தச் சட்டத்தின்படி குடியுரிமை தரப்படும் என்றும் எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. இதனால், முஸ்லிம் அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், பீகாரில் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி நடத்தும் முதலமைச்சர் நிதிஷ்குமார் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
என்.ஆர்.சியை பீகாரில் அமல்படுத்த மாட்டோம் என்று ஏற்கனவே சொல்லி விட்டேன். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்த வழக்கு தற்போது சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. யாருக்காவது குறையிருந்தால், அந்த வழக்கில் சொல்லலாம்.
அதே சமயம், என்.பி.ஆரை பொறுத்தவரை அது ஏற்கனவே காங்கிரஸ் காலத்தில் 2011ல் மேற்ெகாள்ளப்பட்டதுதான். ஆனால், அதில் சில புதிய மாற்றங்கள் ெகாண்டு வரப்பட்டுள்ளன. அவை நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும். அது தேவையற்றது.
இப்போது யாருக்குமே பெற்றோரின் பிறந்த தேதி தெரியாது. எனவே, பழைய முறையில் என்.பி.ஆர். தயாரிப்பு பணியை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். உங்கள் கட்சியில்(ஐக்கிய ஜனதாதளம்) துணை தலைவராக உள்ள பிரசாந்த் கிஷோர், டெல்லியில் உங்கள் கூட்டணிக் கட்சியான பாஜகவை எதிர்க்கும் ஆம் ஆத்மி கட்சிக்கு வேலை செய்கிறாரே? என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு நிதிஷ்குமார், அவர் விருப்பப்பட்டால் கட்சியை விட்டு வெளியேறலாம். அல்லது கட்சியின் அடிப்படை விதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்று மழுப்பலாக பதிலளித்தார்.