கேரள சட்டசபையில் இன்று கவர்னர் உரையாற்றும் போது, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மாநில அரசின் கருத்தை வாசித்தார். மேலும், அதில் தனது எதிர்ப்பையும் பதிவு செய்தார். அதே சமயம், அவருக்கு எதிராக காங்கிரஸ் கூட்டணி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடதுசாரிகள் ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக ரமேஷ் சென்னிதாலா இருக்கிறார்.
இந்நிலையில், மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அம்மாநிலத்தில் ஆளும் இடதுசாரி கட்சிகளும், எதிர்கட்சியான காங்கிரசும் இணைந்து போராட்டம் நடத்தின. மேலும், அந்த சட்டத்தை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது.
இது மத்திய பாஜக அரசால் நியமிக்கப்பட்ட கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு கோபம் ஊட்டியது. மத்திய சட்டத்தை எதிர்த்து மாநில அரசு செயல்பட முடியாது என்று கண்டனம் தெரிவித்தார்.
இந்த சூழலில், கேரள சட்டசபையின் இந்தாண்டு முதல் கூட்டத் தொடர் வரும் 29ம் தேதி தொடங்குகிறது. இதில் கவர்னர் ஆரிப் முகமது கான் உரையாற்ற உள்ளார். ஒரு மாநிலத்தில் ஆளும்கட்சி தயாரித்து வழங்கும் உரையைத்தான் கவர்னர், சட்டசபையில் வாசிப்பது மரபாக இருக்கிறது.
அதன்படி, பினராயி விஜயன் அரசு தயாரித்து அளித்த உரை, கவர்னருக்கு அனுப்பப்பட்டது. அதில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான கருத்துகளும் இடம் பெற்றது. இதையடுத்து, இந்த பகுதிகளை சேர்த்ததற்கான விளக்கம் கேட்டு, கவர்னர் அந்த உரையை மாநில அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். மேலும், மத்திய பட்டியலில் உள்ள குடியுரிமை சட்டம் தொடர்பான கருத்துக்களை மாநில அரசின் உரையில் சேர்க்க முடியாது என்று அவர் கூறியிருந்தார்.
இதனால், சட்டசபையின் அதிகாரத்தையே கேள்விக்குறியாக்கும் கவர்னரை திரும்ப அழைக்க வேண்டுமென ஜனாதிபதிக்கு வலியுறுத்தும் தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்ற வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா, சபாநாயகருக்கு நோட்டீஸ் கொடுத்தார்.
இதையடுத்து, கவர்னர் உரையாற்றுவாரா, குறிப்பிட்ட அந்த பகுதியை வாசிப்பாரா என்ற பரபரப்பு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், கவர்னர் ஆரிப் முகமதுகான் இன்று(ஜன.29) சட்டசபைக்கு வந்தார். அவரை முதல்வர் பினராயி விஜயன் அழைத்து வந்தார். அப்போது அவருக்கு எதிராக எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கோஷம் எழுப்பினர். கோ பேக் கவர்னர் என்ற வாசகம் அடங்கிய பேனர்களை கையில் ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தனர். அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களை சபைக் காவலர்கள் வெளியேற்றினர்.
இதன்பின்பு, கவர்னர் ஆரிப் முகமதுகான் தனது உரையை வாசித்தார். அப்போது, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சேர்க்கப்பட்டிருந்த 18வது பத்தியை வாசிப்பதற்கு முன்பாக தனது கருத்தை கவர்னர் குறிப்பிட்டார். தான் அந்த பத்தியை படிக்க விரும்பவில்லை என்றும் ஆனால் அது தனது அரசின் கொள்கை என்று முதல்வர் தெரிவித்ததால் அதை படிப்பதாகவும் குறிப்பிட்டார்.
அதில், இந்தியா மதசார்பற்ற நாடு, இங்கு மதரீதியாக குடியுரிமை வழங்க முடியாது என்றும், சட்டசபையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்தும் குறிப்பிடப்பட்டிருந்தது. கவர்னர் அந்த உரையை வாசிக்காவிட்டால், அது அரசியலமைப்பு சட்டச் சிக்கலை ஏற்படுத்தும் என்று பேசப்பட்டது. ஆனால், கவர்னர் அதை வாசித்து விட்டதால் பிரச்னை எதுவும் எழவில்லை.
இதற்கிடையே, எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா கூறுகையில், முதல்வரும், பாஜக அரசால் நியமிக்கப்பட்ட கவர்னரும் ரகசிய ஒப்பந்தம் போட்டுள்ளார்கள் என்று குற்றம்சாட்டினார்.