நாடாளுமன்றம் நாளை முதல் கூடுகிறது. இதையொட்டி பிரதமர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது.
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். இதைத் தொடர்ந்து, மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கலாகிறது.
பின்னர், பிப்.1ம் தேதியன்று மத்திய அரசின் 2020-2021ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மோடி ஆட்சிக்கு வந்த பின்பு, ரயில்வே பட்ஜெட்டும், பொது பட்ஜெட்டில் இணைக்கப்பட்டு விட்டதால், ரயில்வே திட்டங்களும் ஒரே பட்ஜெட்டிலேயே அறிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த கூட்டத் தொடரையொட்டி அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று நாடாளுமன்ற நூலக அரங்கில் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ராஜ்நாத்சிங், பிரகலாத் ஜோஷி உள்பட மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா, ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, திமுக சார்பில் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா மற்றும் நாடாளுமன்ற கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நாடாளுமன்ற தொடரை சுமுகமாக நடத்தவும், சட்டமசோதாக்களை நிறைவேற்றவும் ஒத்துழைக்குமாறு அனைத்து கட்சியினரையும் பிரதமர் மோடி கேட்டு கொண்டார்.