நாதுராம் கோட்சேவும், பிரதமர் நரேந்திர மோடியும் ஒரே கொள்கை உடையவர்கள்தான் என்று ராகுல்காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கேரளாவில் உள்ள தனது வயநாடு தொகுதியில் கல்பேட்டாவுக்கு இன்று(ஜன.30) காலை சென்றார். அங்கு மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி அரசியலமைப்பு சட்டத்தை காப்போம் என்ற தலைப்பில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. இதில் ராகுல்காந்தி கலந்து கொண்டு நடந்து சென்றார். அவருடன் கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பேரணியில் சென்றனர்.
பேரணியின் முடிவில் ராகுல்காந்தி பேசியதாவது:
நாதுராம் கோட்சேவும், பிரதமர் மோடியும் ஒரே கொள்கையை கொண்டவர்கள்தான். ஒரே வித்தியாசம், தான் கோட்சே கொள்கைகளை நம்புவதாக வெளிப்படையாக சொல்வதற்கு பிரதமருக்கு துணிவு கிடையாது.
பிரதமர் மோடி எங்கு சென்றாலும், யாராவது வேலைவாய்ப்பின்மை பற்றி கேட்டால் உடனே தனது பேச்சை திசை திருப்பி விடுவார். வேலைவாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் அவதிப்படுகிறார்கள். குடியுரிமை திருத்த சட்டமோ, என்.ஆர்.சியோ, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தராது. காஷ்மீரில் இப்போது ஏற்பட்டுள்ள சூழல், வேலைவாய்ப்பை தராது. அசாம் எரியும் சூழலும் யாருக்கும் வேலைவாய்ப்பை பெற்று தராது.
இன்றைக்கு எல்லா இந்தியர்களும் தாங்கள் இந்தியர் என்பதை நிரூபிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். நான் இந்தியரா என்பதை சொல்வதற்கு நரேந்திர மோடி யார்? நான் இந்தியன் என்பது எனக்கு தெரியும். நான் அதை யாருக்கும் நிரூபிக்கத் தேவையில்லை.
இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.