நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றவுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.
அவரது உரை முடிந்ததும் அரை மணி நேரம் மக்களவை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம், கோஸி தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய எம்.பி. அதுல் குமார்சிங் பதவிப் பிரமாணம் எடுத்து கொள்கிறார். தொடர்ந்து, மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார். தொடர்ந்து 7 நிலைக் குழுக்களின் அறிக்கைகள் தாக்கலாகின்றன. இதன்பின், அவை ஒத்திவைக்கப்படும். இதைத் தொடர்ந்து, நாளை மக்களவை கூடியதும், 2020-21ம் ஆண்டுக்கான மத்திய பட்ெஜட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார்.
நாடாளுமன்றம் கூடுவதைெயாட்டி, மத்திய அரசின் சார்பில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சிகூட்டம் நேற்று நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் ராஜ்நாத்சிங், பிரகலாத் ஜோஷி உள்பட மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். காங்கிரஸ் கட்சி சார்பில் குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா, ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, திமுக சார்பில் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா மற்றும் நாடாளுமன்ற கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழைக்குமாறு பிரதமர் கேட்டு கொண்டார். இதேபோல், மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா தனியாக அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தினார்.
மிகவும் பரபரப்பான சூழ்நிலையில், இந்த கூட்டத்தொடர் தொடங்குகிறது. நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்த ஐக்கிய ஜனதா தளம், சிரோண்மனி அகாலிதளம், பிஜுஜனதா தளம் போன்ற கட்சிகளும் தற்போது என்.பி.ஆர், என்.ஆர்.சி போன்றவற்றை எதிர்க்கின்றன.
இதனால், நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக பெரும்பாலான கட்சிகள் அணிவகுத்துள்ளன. எனவே, இந்த தொடரில் தினமும் அமளிதான் காணப்படும் என்பதில் சந்தேகமில்லை.