குடியுரிமை திருத்தச் சட்டத்தை மறுபரிசீலனை செய்யவும், என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றை நிறுத்துவது குறித்தும் விவாதிக்க மக்களவையில் காங்கிரஸ் நோட்டீஸ் கொடுத்துள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சனிக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து இன்று நாடாளுமன்றம் மீண்டும் கூடுகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வருவதால், அந்த சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். என்.பி.ஆர், என்.ஆர்.சி ஆகியவற்றை நிறுத்தி வைக்க வேண்டும். இது குறித்து மக்களவையில் மற்ற அலுவல்களை ஒத்தி வைத்து, விவாதம் நடத்த வேண்டும் என்று கோரி, காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, கொடிக்குன்னில் சுரேஷ், கவுரவ் கோகய் ஆகியோர் ஒத்தி வைப்பு தீர்மானம் கொடுத்துள்ளனர்.
இதே போல், மாநிலங்களவையில் பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் சதீஷ் சந்திர மிஸ்ரா மற்றும் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் பேரவை விதி 267ன் கீழ் ஒத்தி வைப்பு தீர்மானம் கொடுத்துள்ளனர்.