அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் 5 பேருக்கு ஆயுள்.. நீதிமன்றம் தீர்ப்பு

by எஸ். எம். கணபதி, Feb 3, 2020, 16:20 PM IST

அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் 5 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், டெல்லியைச் சேர்ந்த ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகிறார். இரண்டாவது மகள் சென்னையில் உள்ள பிரபலமான பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.
மூத்தமகள் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்தபோது, அவரிடம் சிறுமி அதிர்ச்சிகரமான தகவலை கூறியிருக்கிறார். கடந்த 5 மாத காலமாக அந்த அபார்ட்மெண்டில் உள்ள 8 லிப்ட் ஆப்ரேட்டர்கள், ஆறு காவலாளிகள் என்று பலர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தனக்கு போதை ஊசி போட்டு துன்புறுத்தியதாகவும் கூறியிருக்கிறார்.
இதை மூத்த மகள் சொல்ல கேட்டு அதிர்ச்சியில் உறைந்த சிறுமியின் பெற்றோர், அயனாவரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். போலீசார் உடனடியாக விசாரணை நடத்தி, கடந்த 2018ம் ஆண்டு ஜூலையில் லிப்ட் ஆபரேட்டர்கள் உள்பட 17 பேரை கைது செய்து விசாரித்தனர்.

குற்றம்சாட்டப்பட்ட 17 பேரில் ஒருவர் உயிரிழந்தார். 16 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அரசுத்தரப்பில் 36 சாட்சிகளும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 7 சாட்சிகளும் விசாரிக்கப்பட்டனர். 120 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. வழக்கை விசாரித்த போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா கடந்த 2 நாட்களுக்கு முன்பு தீர்ப்பு கூறினார், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தோட்டக்காரர் குணசேகரன் தவிர மற்ற 15 பேரும் குற்றவாளிகள் என்று அதில் கூறியிருந்தார். மேலும், அவர்களுக்கான தண்டனை இன்று(பிப்.3) அறிவிப்பதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில், குற்றவாளிகள் 15 பேரும் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மதியம் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா தீர்ப்பை கூறினார். அதில் அவர் கூறியிருந்ததாவது:
குற்றவாளிகள் ரவிக்குமார், சுரேஷ், அபிஷேக், பழனி ஆகிய 4 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. ராஜசேகர் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. எரால் பிராஸ் என்பவருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும், சுகுமாறன், சூர்யா, ஜெயராமன், உமாபதி, முருகேசன், பரமசிவம், ஜெயகணேஷ், தீனதயாளன், ராஜா ஆகிய 9 பேருக்கு தலா 5 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

You'r reading அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் 5 பேருக்கு ஆயுள்.. நீதிமன்றம் தீர்ப்பு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை