திமுக உட்கட்சி தேர்தல் வரும் 21ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
திமுகவின் 15-வது உட்கட்சிப் பொதுத் தேர்தல் 2020 பிப்ரவரி 21ம் தேதி தொடங்குகிறது. கடந்த 1949ம் ஆண்டு தொடங்கி, உள்கட்சி அமைப்புகள் முதல் தலைமைக் கழகம் வரை ஜனநாயக அடிப்படையில் முறையாக, இதுவரை 14 பொதுத் தேர்தல்களை நடத்தி நிர்வாகிகளை தேர்ந்தெடுத்த சிறப்புக்குரிய இயக்கம் திமுக ஆகும்.
திமுக சட்டதிட்டங்களின்படி, பல கட்டங்களாக திமுக அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடைபெறும். முதல் கட்டமாக கிளைக் கழகங்களுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும். அதனைத் தொடர்ந்து பேரூர்க் கழகம் மற்றும் மாநகர வட்டக் கழகத் தேர்தல்கள், அதன் தொடர்ச்சியாக, ஒன்றிய, நகர, மாநகரப் பகுதிக் கழகத் தேர்தல்களும், பின்னர், மாநகரக் கழகத் தேர்தல்களும் நடைபெறும்.
இவற்றைத் தொடர்ந்து, மாவட்ட திமுக நிர்வாகிகள், தலைமைப் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்கள் நடைபெற்ற பின்னர், புதிய பொதுக்குழு கூட்டப்பட்டு தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் திமுக தணிக்கைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்கள் நடைபெறும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.