சேலம், நாமக்கல் மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். வீரபாண்டி ஆ.ராஜாவிடம் இருந்து மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு புதிய பதவி தரப்பட்டுள்ளது.
திமுகவில் உட்கட்சி தேர்தல் நடப்பதற்கு முன்பாகவே மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்பட்டு, புதிய நியமனங்கள் நடைபெற்று வருகின்றன. திருச்சி மாவட்டச் செயலாளராக இருந்த கே.என்.நேருவுக்கு தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திருச்சி மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, திருச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக காடுவெட்டி தியாகராஜனும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக அன்பில் மகேஷ் பொய்யாமொழியும், திருச்சி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளராக வைரமணியும் நியமனம் செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, வீரபாண்டி ஆ.ராஜா மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதற்கு பதிலாக அவருக்கு தேர்தல் பிரிவு செயலாளர் பதவி தரப்பட்டுள்ளது. இது குறித்து, திமுகபொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து வீரபாண்டி ஆ.ராஜா விடுவிக்கப்படுகிறார். திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் பதவியில் டி.எம்.செல்வகணபதிக்கு பதிலாக வீரபாண்டி ஆ.ராஜா அந்த பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம் மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்த எஸ்.ஆர்.சிவலிங்கம், சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளராக டி.எம்.செல்வகணபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
நாமக்கல் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்த செ.காந்திசெல்வன் விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.