மகாத்மா காந்தியை மட்டமாக சொல்லவில்லை.. பாஜக எம்.பி. பல்டி

by எஸ். எம். கணபதி, Feb 4, 2020, 13:29 PM IST

கர்நாடகா மாநிலத்தின் உத்தரகன்னடா தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் அனந்தகுமார் ஹெக்டே, ஏற்கனவே மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். இவர் பிப்.1ம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

சுதந்திரத்திற்காக நடந்த உண்ணாவிரத போராட்டமும், சத்தியாகிரகமும் ஒரு நாடகம். அந்த சுதந்திரப் போராட்டமே ஆங்கிலேயரின் ஒப்புதலுடன் சில தலைவர்கள் நடத்திய நாடகம்தான். அது உண்மையான போராட்டமே இல்லை. அவர்களில் ஒருவர் கூட ஒரு முறை கூட போலீசாரால் தாக்கப்படவில்லை.

சத்தியாகிரகம் மற்றும் அமைதி வழி போராட்டத்தின் மூலம்தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது என்று காங்கிரசை ஆதரிப்பவர்கள் கூறிக் கொண்டே இருக்கிறார்கள். இது உண்மையல்ல. சத்தியாக்கிரகப் போராட்டத்தால் ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறவில்லை. விரக்தி அடைந்துதான் ஆங்கிலேயர்கள் சுதந்திரம் கொடுத்தனர். வரலாற்றைப் படிக்கும்போது என் ரத்தம் கொதிக்கிறது. ஆனால், அந்த தலைவர்கள்தான் நம் நாட்டில் மகாத்மாவாகிறார்கள்.
இவ்வாறு அனந்தகுமார் ஹெக்டே பேசினார். மகாத்மா காந்தியே ஆங்கிலேயருடன் ரகசிய கூட்டணி வைத்துதான் சுதந்திரப் போராட்டம் நடத்தினார் என்று அவர் மறைமுகமாக பேசியது காங்கிரசாருக்கு கடும் எரிச்சலை ஊட்டியது. பாஜகவினர் வரலாறுகளை தங்கள் விருப்பம் போல் திருத்தி எழுத முயற்சிக்கிறார்கள் என்று குற்றம்சாட்டினர்.

ஆனால், அனந்தகுமாரின் பேச்சு தொடர்பாக பாஜக தலைமையோ, பிரதமரோ இன்று(பிப்.4) வரை வாயே திறக்கவில்லை. அதே சமயம், பிரதமர் மிகவும் வருத்தமடைந்து, அனந்தகுமாரை மன்னிப்பு கேட்கச் சொன்னதாக யூகமான செய்திகள் மட்டும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், இன்று ஏ.என்.ஐ.க்கு அனந்தகுமார் அளித்த பேட்டியில், நான் மகாத்மா காந்தியைப் பற்றியோ, எந்த கட்சியையும் பற்றியோ எதுவுமே பேசவில்லை. சுதந்திரப் போராட்டத்தை வகைப்படுத்தி பேசினேன். மீடியாவில் இது பற்றி தேவையில்லாத சர்ச்சைகள் கிளப்பப்படுகின்றன. அவை எல்லாமே தவறானவை என்று மறுப்பு தெரிவித்தார்.


Leave a reply