அமித்ஷாவின் அரசியல் நாடகம்.. கெஜ்ரிவால் காட்டம்

by எஸ். எம். கணபதி, Feb 5, 2020, 13:12 PM IST

டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மியை தோற்கடிப்பதற்காக போலீசை வைத்து கொண்டு அமித்ஷா அரசியல் நாடகம் ஆடுகிறார் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கியுள்ளார்.

டெல்லியில் வரும் 8ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதற்கிடையே, டெல்லியில் ஷாகீன் பாக் பகுதியில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்த போராட்டக்காரர்களுக்கு எதிராக கபில் குஜ்ஜார் என்ற இளைஞர் துப்பாக்கியால் சுட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கபில் குஜ்ஜாரை கைது செய்த டெல்லி போலீசார், அவருக்கும் ஆம் ஆத்மி தலைவர்களுக்கும் தொடர்பு உள்ளதாக கூறினர்.

இந்நிலையில், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான கெஜ்ரிவால் அளித்த பேட்டி வருமாறு:
கபில் குஜ்ஜாருக்கும் ஆம் ஆத்மிக்கும் தொடர்பு உள்ளதாக டெல்லி போலீசாரை கொண்டு சொல்ல வைத்திருக்கிறார் அமித்ஷா. அவர்கள் என்னை இந்து விரோதி என்றார்கள், ராவணன் என்றார்கள். துரோகி என்றார்கள். என்னென்னமோ சொல்லிப் பார்த்தும் மக்களுக்கு நான் ஆற்றிய பணிகளை அவர்களால் மறைக்க முடியவில்லை. அதனால், அமித்ஷா கடைசி நேரத்தில் இப்படியொரு அரசியல் நாடகத்தை ஆடுகிறார்.
அந்த கபில் குஜ்ஜாருக்கும். ஆம் ஆத்மி உள்பட எந்த கட்சிக்கும் தொடர்பு இல்லை என்று அவரது குடும்பத்தினரே கூறியிருக்கிறார்கள். கபில் குஜ்ஜார் ஆம் ஆத்மி கட்சிக்கு தொடர்புடையவர் என்று நினைத்தால், அவர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுங்கள்.

ஆனால், தேர்தல் நடைபெறுவதற்கு 2 நாள் முன்பு அமித்ஷா எப்படி அரசியல் நாடகம் ஆடுகிறார் என்பது மக்களுக்கு தெரியும். என்னுடன் ஐ.ஐ.டி.யில் படித்தவர்கள் எல்லாம் வெளிநாடுகளில் வேலை பார்த்து மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஆனால், நான் என் குடும்பத்திற்காக எதையும் செய்யவில்லை. வருமானவரித் துறை ஆணையராக நாட்டுக்காக பணியாற்றினேன். இப்போது வரை அப்படித்தான் இருக்கிறேன். இதை மக்கள் உணர்ந்தால் ஆம் ஆத்மிக்கு வாக்களிப்பார்கள்.
இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.

You'r reading அமித்ஷாவின் அரசியல் நாடகம்.. கெஜ்ரிவால் காட்டம் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை