அயோத்தியில் ராமர்கோயில் கட்டுவதற்கு புதிய அறக்கட்டளை.. பிரதமர் மோடி தகவல்

by எஸ். எம். கணபதி, Feb 5, 2020, 13:10 PM IST

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி, மக்களவையில் தெரிவித்தார்.

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு அந்த சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது. சமீபத்தில் அந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்றும் அதற்கு பதிலாக வேறொரு பகுதியில் பாபர் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், ராமர்கோயிலை கட்டுவதற்கு தனி அறக்கட்டளை அமைக்கவும் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், மக்களவையில் இன்று(பிப்.5) காலை பிரதமர் மோடி கூறியதாவது:
இன்று வரலாற்று சிறப்புவாய்ந்த, மிக முக்கியமான தகவல் ஒன்றை கூற வந்துள்ளேன். கோடிக்கணக்கான மக்களை போல் என் உள்ளத்திற்கும் மகிழ்ச்சி தரும், அதே சமயம் இதை அறிவிப்பதற்கு எனக்கு கிடைத்த வரம் என்றும் சொல்வேன்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை நிறைவேற்றுவதற்கு ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை என்ற அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளையிடம் 67.703 ஏக்கர் நிலம் ஒப்படைக்கப்படும்.

அதே போல், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி சன்னி முஸ்லிம் வாரியத்திடம் 5 ஏக்கர் நிலத்தை ஒப்படைக்க உத்தரப்பிரதேச அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார். அவரது அறிவிப்பை பாஜக மற்றும் கூட்டணி கட்சியின் உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி வரவேற்றனர்.

You'r reading அயோத்தியில் ராமர்கோயில் கட்டுவதற்கு புதிய அறக்கட்டளை.. பிரதமர் மோடி தகவல் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை