சுயலாபத்திற்காக போராட்டத்தை தூண்டி விடும் கட்சிகள்... ரஜினி திட்டுவது திமுகவையா?

by எஸ். எம். கணபதி, Feb 5, 2020, 12:10 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பில்லை என்றும், சில அரசியல் கட்சிகள் சுயலாபத்திற்காக போராட்டத்தை தூண்டி விடுகிறார்கள் என்றும் ரஜினிகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

விரைவில் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அவ்வப்போது தன் வீட்டு வாயிலில் நிருபர்களுக்கு பேட்டி அளிப்பார். கடைசியாக, கடந்த மாதம் 21ம் தேதி அவர் பேட்டியளித்தார். பெரியார் குறித்த தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று அவர் அப்போது கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று(பிப்.5) தனது அடுத்த பேட்டியை வழக்கம் போல் வீட்டு வாசலில் கொடுத்தார். அப்போது நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த விசாரணை கமிஷனில் இருந்து எனக்கு ஒரு சம்மனும் வரவில்லை. வந்த பிறகு அங்கு பதில் கொடுக்கிறேன்.

என்பிஆர்(தேசிய மக்கள் தொகை பதிவேடு) என்பது மிகவும் அவசியம். அது காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே 2010ம் ஆண்டு எடுத்தார்கள். 2015ல் எடுத்தார்கள். 2021ல் எடுத்தாக வேண்டும். யார் வெளிநாட்டுக்காரர்கள், யார் உள்நாட்டுக்காரர்கள் என்று தெரிந்தாக வேண்டும். இதுல மக்களுக்கு என்ன பிரச்னை என்று தெரியவில்லை.
என்.ஆர்.சி(தேசிய குடிமக்கள் பதிவேடு) இன்னும் யோசனையில்தான் இருப்பதாக கூறியிருக்கிறார்கள். அதன் டிராப்ட்(மாதிரி) வந்த பிறகுதான் அதில் என்ன சொல்லியிருக்கிறது என்று பார்த்து விட்டு சொல்ல முடியும்.

சி.ஏ.ஏ.(குடியுரிமை திருத்தச் சட்டம்) பத்தி மத்திய அரசு தெளிவா சொல்லிட்டாங்க. அதனால யாருக்கும் எந்த பிரச்னையும் வராது என்று. வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு குடியுரிமை வழங்குவதற்குத்தான் இந்த சட்டம். இஸ்லாமியர்களுக்கு இது பெரிய அச்சுறுத்தல் என்று பீதி கிளப்பி விட்டிருக்கிறார்கள்.

இந்த நாடு பிரிவினையின் போது இஸ்லாமியர்கள், நாங்கள் இங்குதான் வாழ்வோம், செத்தாலும் இங்குதான் சாவோம் என்று சொல்லிவிட்டு இங்கேயே இருப்பவர்கள். அவர்களை வெளியேறச் சொன்னால் அதை எதிர்த்து நான் முதல் குரல் கொடுப்பேன். சில அரசியல்கட்சிகள்தான் தங்கள் சுயலாபத்திற்காக, சுயநலனுக்காக சி.ஏ.ஏ.வுக்கு எதிராக போராட்டத்தை தூண்டி விடுகிறார்கள். அதை சில மதபோதகர்களும் துணை போகிறார்கள். இது தவறானது.

மாணவர்களும் விவரம் தெரியாமல் போராடக் கூடாது. போராட்டத்தில் இறங்கும் முன்பாக தங்கள் ஆசிரியர்கள், முன்னோர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு போராட வேண்டும். இல்லாவிட்டால் அரசியல் கட்சிகள் உங்களை முழுமையாக பயன்படுத்தி கொள்வார்கள். நீங்கள் போராட்டம் நடத்தினால் போலீஸ் எப்படி நடப்பார்கள் என்று சொல்ல முடியாது. உங்கள் வாழ்க்கைதான் பாதிக்கப்படும்.

இந்தியாவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும். ஆனால், இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கு வழங்க கூடாது. அவர்கள் சோழர் காலத்திலே இருந்து அங்கிருப்பவர்கள்.
இவ்வாறு ரஜினி பதிலளித்தார்.

இதைத் தொடர்ந்து, நீங்கள் வருமான வரித் துறையில் காட்டிய கணக்கில் வட்டிக்கு விட்டு பணம் சம்பாதித்ததாக கூறியிருக்கிறீர்களே? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், நான் முறையாக வரி செலுத்தியிருக்கிறேன். நேர்மையாக வரி செலுத்தியிருக்கிறேன் என்று கூறி விட்டு, பேட்டியை முடித்து விட்டார்.
வட்டிக்கு பணம் கொடுத்ததை நியாயம் என்றோ, தவறோ என்று அவர் ஒப்புக் கொள்ளவில்லை.

தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் தீவிரமாக நடைபெற்று வரும் சமயத்தில், போராட்டத்தை தூண்டி விடும் கட்சிகள் என்று ரஜினி சொல்வது திமுகவைத்தானா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Leave a reply