அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளை உறுப்பினர்கள் 15 பேரில் ஒரு தலித்தை இடம்பெறச் செய்ததற்காக பிரதமருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் அமித்ஷா.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு அந்த சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது. சமீபத்தில் அந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்றும் அதற்கு பதிலாக வேறொரு பகுதியில் பாபர் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், ராமர்கோயிலை கட்டுவதற்கு தனி அறக்கட்டளை அமைக்கவும் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி இன்று(பிப்.5) காலை ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுவதற்கு ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை என்ற அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையில் 15 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் ஒருவர் தலித் உறுப்பினர். முன்னெப்போதும் இல்லாத வகையில் சமூக நல்லிணக்கத்தை உறுதி செய்யும் பிரதமரின் இந்த நடவடிக்கைக்கு மிகுந்த பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.