கர்நாடகாவில் 10 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. கட்சி தாவியவர்களுக்கு யோகம்..

by எஸ். எம். கணபதி, Feb 6, 2020, 12:28 PM IST

கர்நாடாகாவில் காங்கிரஸ், ம.ஜ.த. கட்சிகளில் இருந்த வந்த 10 பேருக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளார் முதல்வர் எடியூரப்பா. அந்த 10 புதிய அமைச்சர்களும் இன்று காலை பதவியேற்றனர்.

கர்நாடகாவில் கடந்த ஆண்டில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. காங்கிரஸ் 80 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்த போதும், வெறும் 37 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட ம.ஜ.த.வுக்கு முதலமைச்சர் பதவியை விட்டு கொடுத்தது. அப்போது முதலமைச்சராக குமாரசாமி பதவி வகித்தார். இந்நிலையில், அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தியில் இருந்த காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த. கட்சியின் எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க. வளைத்தது.

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 14 பேர், ம.ஜ.த. கட்சியைச் சேர்ந்த 3 பேர் என 17 பேர் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். இதன்பின், குமாரசாமி ஆட்சி கவிழ்ந்து, எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது. இதன்பின், 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் கட்சித் தாவிய 13 பேருக்கு பாஜகவில் சீட் தரப்பட்டது. 11 பேர் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு அமைச்சர் பதவியும் தரப்படும் என்று ஏற்கனவே முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்திருந்தார்.

இதன்படி, எடியூரப்பா இன்று தனது அமைச்சரவையை விரிவுபடுத்தினார். பெங்களூரு ராஜ்பவனில் காலை 10.30 மணிக்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவில் 10 அமைச்சர்கள் பதவியேற்றனர். எஸ்.டி.சோமசேகர், ரமேஷ் ஜரிகோலி, ஆனந்த் சிங், பைரதி பசவராஜா, சிவராம் ஹெப்பர், பி.சி.பாடீல், கோபாலய்யா, நாராயணகவுடா, ஸ்ரீமந்த் பாடீல், சுதாகர் ஆகிய 10 பேர் பதவியேற்றனர். இவர்களுக்கு ஆளுநர் வசுபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் எடியூரப்பா மற்றும் முக்கியப் பிரமுகர்கள் விழாவில் பங்கேற்றனர்.

புதிய அமைச்சர்கள் அனைவருமே காங்கிரஸ், ம.ஜ.த. கட்சிகளில் இருந்து கட்சித் தாவி வந்தவர்கள்தான். கட்சி தாவியவர்களில் அதானி தொகுதியில் வென்ற மகேஷ் குமத்ஹள்ளிக்கு மட்டும் அமைச்சர் பதவி தரப்படவில்லை. காரணம், அவர் ஏற்கனவே தோற்கடித்த பாஜக பிரமுகர் லட்சுமண்சாவடி தற்போது துணை முதல்வராக இருக்கிறார். அதனால், ஒரு பகுதிக்கு 2 பிரதிநிதித்துவம் தர முடியாது என்று மறுத்திருக்கிறார்கள். அவருக்கு வேறு பதவி தரப்படலாம் எனத் தெரிகிறது.
முதல்வர் எடியூரப்பாவுடன் புதிய அமைச்சர்களையும் சேர்த்தால் அமைச்சரவை எண்ணிக்கை 28 ஆக உள்ளது. கர்நாடகாவில் அதிகபட்சம் 34 அமைச்சர்கள் இருக்கலாம். எனவே, இன்னும் 6 பேர் அமைச்சராக வாய்ப்பு உள்ளது.

You'r reading கர்நாடகாவில் 10 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. கட்சி தாவியவர்களுக்கு யோகம்.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை