அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது கொண்டு வரப்பட்ட 2 தீர்மானங்களும் செனட் சபையில் தோல்வியுற்றது. இதனால், அவர் மீதான 2 குற்றச்சாட்டுகளிலும் அவர் விடுவிக்கப்பட்டார்.
அமெரிக்காவில் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் மீண்டும் போட்டியிட்டால், அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் ஜோ பிடன் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. ஜோ பிடனும், அவரது மகனும் சேர்ந்து உக்ரைனில் ஒரு தொழில் நிறுவனம் நடத்தி வருகின்றனர். அந்நிறுவனத்தின் மீது ஊழல் வழக்கு தொடர்ந்து விசாரிக்குமாறு உக்ரைன் அரசுக்கு டிரம்ப் நெருக்கடி கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டது. ஜோ பிடன் மீது இப்போதே ஊழல் கறையை படிய வைப்பதன் மூலம் தனக்கு தேர்தலில் சாதகம் ஏற்படும் என்று டிரம்ப் இப்படி செய்ததாக கூறப்பட்டது. இது குற்றச்சாட்டு, அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில், டிரம்ப் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும், இது தொடர்பாக நாடாளுமன்ற விசாரணை நடைபெறாமல் இடையூறு ஏற்படுத்தியதாகவும் குற்றம்சாட்டி, அவரைப் பதவி நீக்கம் செய்வதற்கான இரு தீர்மானங்களை பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சினர் கொண்டு வந்தனர். கடந்த டிசம்பரில் இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து செனட் சபையில் இத்தீர்மானங்கள் மீது விவாதம் நடத்தப்பட்டு, நேற்று(பிப்.5) வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக தொடரப்பட்ட தீர்மானத்திற்கு டிரம்ப்புக்கு ஆதரவாக 52 உறுப்பினர்களும், டிரம்ப்புக்கு எதிராக 48 உறுப்பினர்களும் வாக்களித்தனர். டிரம்ப்பை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றால், அவருக்கு எதிராக 66 உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும். அதனால், அந்த குற்றச்சாட்டில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இரண்டாவது குற்றச்சாட்டு மீதான வாக்கெடுப்பில் டிரம்ப்புக்கு ஆதரவாக 53 வாக்குகளும், எதிராக 47 வாக்குகளும் கிடைத்தன. இதனால், இந்த குற்றச்சாட்டில் இருந்தும் டிரம்ப் விடுவிக்கப்பட்டார்.
மொத்தம் 100 உறுப்பினர்களை கொண்ட செனட் சபையில், டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு 53 உறுப்பினர்களும், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கு 47 உறுப்பினர்களும் உள்ளனர். டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய வேண்டுமெனில் குடியரசுக் கட்சியின் 20 உறுப்பினர்களாவது டிரம்ப்புக்கு எதிராக வாக்களித்திருக்க வேண்டும்.
முன்னதாக, விவாதத்திற்கு டிரம்ப் பதிலுரை ஆற்றும் போது, சபாநாயகர் நான்சி பெலோசியிடம் உரை நகலை அளித்தார். அப்போது அவரிடம் பெலோசி கைகுலுக்க கையை நீட்டினார். அதை உதாசீனப்படுத்தி விட்டு உரையாற்றினார் டிரம்ப். இதற்கு பதிலடியாக, டிரம்ப் பேசி முடித்ததும் அந்த உரையை கிழித்தெறிந்தார் நான்சி பெலோசி. இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.