பாஜகவினர், டெல்லி தேர்தல் முடிந்த பிறகு ஷாகீன்பாக்கை ஜாலியன்வாலாபாக் ஆக்கி விடுவார்கள் என்று மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதீன் ஓவைசி கூறியிருக்கிறார்.
டெல்லி சட்டமன்றத் தேர்தல் வரும் 8ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நடைபெறுகிறது. இதற்கிடையே, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லியின் ஷாகீன்பாக் பகுதியில் தொடர்ந்து 50 நாட்களாக முஸ்லிம் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டெல்லி பாஜக பிரச்சாரக் கூட்டங்களில் பேசுபவர்கள், ஷாகீன்பாக் போராட்டத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்குர் பேசும் போது, டெல்லியில் தேர்தல் முடிந்து பாஜக ஆட்சிக்கு வந்ததும் ஒரே நாளில் ஷாகீன்பாக்கை சரிசெய்து விடுவோம் என்று கூறினார். மேலும், துரோகிகளை சுட்டு தள்ள வேண்டுமென்று ஒரு முறை பேசியிருந்தார்.
இந்நிலையில், மஜ்லிஸ் இட்டாஹடுல் முஸ்லிமீன் கட்சித் தலைவர் அசாதீன் ஓவைசி அளித்த பேட்டியில், பிப்.8ம் தேதிக்கு பிறகு அவர்கள்(பாஜக), ஷாகீன்பாக்கை ஜாலியன்வாலா பாக் ஆக்கி விடுவார்கள். அவர்கள் போராட்டக்காரர்களை சுட்டுத் தள்ளக்கூடும். இதைத்தான் ஒரு அமைச்சரே பேசியிருக்கிறார் என்று கூறினார்.
சுதந்திரப் போராட்டக்காலத்தில் ஜாலியன்வாலாபாக் என்ற இடத்தில் போராட்டக்காரர்களை வெள்ளை ராணுவத்தினர் சரமாரியாக சுட்டுத்தள்ளினர். அதை ஓவைசி குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.