நடிகர் விஜய் வீடுகளில் 2வது நாளாக ஐ.டி. ரெய்டு.. ரசிகர்கள் கடும் அதிர்ச்சி..

by எஸ். எம். கணபதி, Feb 6, 2020, 12:20 PM IST

பிகில் படத்திற்கு அதிகமான சம்பளம் பெற்ற விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் வீடுகளில் வருமானவரித் துறையினர்(ஐ.டி.) 2வது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, பிகில் பட பைனான்சியர் அன்புசெழியன் வீடுகளில் இருந்து 57 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் நடித்த பிகில் படம் கடந்த ஆண்டில் நல்ல வசூலை கொடுத்த படங்களில் ஒன்று. இந்த படத்தில் விஜய் அதிகமான சம்பளம் பெற்று அதை முறைப்படி வருமான வரித் துறைக்கு கணக்கு காட்டவில்லை என்ற தகவல் அந்த துறைக்கு கிடைத்தது. இதையடுத்து, பிகில் படத் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் நிறுவனம், பைனான்சியர் மதுரை அன்பு எனப்படும் அன்புச்செழியன் வீடு மற்றும் அலுவலகங்களை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று(பிப்.5) அதிகாலை சென்னை சாலிகிராமம் ஸ்டட்பாங்க் காலனி 3வது தெருவில் உள்ள விஜய் வீட்டுக்கு வருமான வரித் துறை அதிகாரிகள் சென்று சோதனை நடத்தினர். அதே சமயம், பைனான்சியரும், அதிமுக பிரமுகருமான அன்புச்செழியனின் மதுரை, சென்னை அலுவலகம் மற்றும் வீடுகளிலும் சோதனை நடத்தினர்.

பிகில் படத்திற்கு விஜய் பெற்ற சம்பளம் தொடர்பாக, விஜய் மனைவியிடம் ஐ.டி. அதிகாரிகள் விசாரித்த போது, அவர் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறி விட்டார். அப்போது விஜய் வீட்டில் இல்லை. விஜய் நேற்று நெய்வேலி என்.எல்.சி சுரங்கத்தில் நடைபெற்ற மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பில் இருந்தார். அதிகாலை 6 மணி முதல் அங்கு நடித்து கொண்டிருந்தார்.

இந்நிலையில், பிற்பகல் 2 மணிக்கு அங்கு வந்து சேர்ந்த ஐ.டி. அதிகாரிகள், விஜய்யிடம் விசாரிக்கச் சென்றனர். ஆனால், சுரங்க வாயிலில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. அதன்பிறகு மெயின் கேட் வழியாகச் சென்று உயர் அதிகாரிகளின் அனுமதி பெற்று, உள்ளே சென்ற ஐ.டி. அதிகாரிகள், விஜய்யிடம் ஒரு வாரன்ட்டை கொடுத்தனர். வருமானவரிச் சட்டப்பிரிவு 132-ன் கீழ் அளிக்கப்பட்ட இந்த வாரன்ட்டை காட்டி, அவரை தங்களது காரிலேயே விசாரணைக்கு அழைத்து சென்றனர். இதனால், படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது
நெய்வேலியில் இருந்து ஐ.டி. அதிகாரிகள், சென்னை பனையூரில் உள்ள விஜய் வீட்டுக்கு அவரை அழைத்து சென்று நள்ளிரவு வரை விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, இ்ன்று 2வது நாளாக விஜய்யின் வீடுகளில் வருமானவரித் துறை சோதனை நடைபெறுகிறது. பனையூரில் உள்ள வீட்டில் விஜய்யிடம் 8 அதிகாரிகள் கொண்ட குழுவினர் தொடர்ந்து துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, அன்புவின் மதுரை வீட்டில் இருந்து ரூ.17 கோடியும், சென்னை வீட்டில் இருந்து ரூ.40 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக ஐ.டி. அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது இடங்களிலும் 2வது நாளாக சோதனை நடைபெறுகிறது.
இந்நிலையில், விஜய்யின் படப்பிடிப்பை பாதியில் நிறுத்தி அவரை அழைத்து விசாரணை நடத்தியது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. ரஜினிகாந்திற்கு விதிக்கப்பட்ட ரூ.66 லட்சம் அபராதத்தை வருமான வரித் துறை தாங்களாவே ரத்து செய்திருப்பதும், விஜய் வீடுகளில் சோதனையும் ஒரே சமயத்தில் நடந்துள்ளதால் இது தமிழக அரசியல் வட்டாரத்திலேயேயும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

You'r reading நடிகர் விஜய் வீடுகளில் 2வது நாளாக ஐ.டி. ரெய்டு.. ரசிகர்கள் கடும் அதிர்ச்சி.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை