காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவைத் தொடர்ந்து, மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் மீதும் பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. இதன்படி, அவர்களை எந்த விசாரணையுமின்றி 2 ஆண்டுகள் சிறைக்காவலில் வைக்கலாம்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்யும், மாநிலத்தை காஷ்மீர், லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட்டில் நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய மாநாட்டு கட்சி மூத்த தலைவர் பரூக் அப்துல்லா, முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் தலைவர்கள் உள்பட 500 பேர் வரை சிறைக்காவலில் வைக்கப்பட்டனர். பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகளும் தொடரப்பட்டன.
வழக்கு விசாரணையின் போது, பரூக் அப்துல்லாவை பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காவலில் வைத்துள்ளதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அந்த சட்டத்தின்படி 2 ஆண்டுகளுக்கு எந்த விசாரணையும் இல்லாமல் யாரையும் காவலில் வைக்கலாம். காஷ்மீரில் ஓரளவு கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டாலும் முக்கிய அரசியல் தலைவர்கள் விடுவிக்கப்படவில்லை.
இந்நிலையில், மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்களின் ஆறு மாத தடுப்பு காவல் நேற்றுடன்(பிப்.6) முடிவுற்றது. இதையடுத்து, அவர்கள் மீதும் பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. இதன்படி அவர்கள் மேலும் 2 ஆண்டுகளுக்கு எந்த விசாரணையும் இல்லாமல் சிறைக்காவலில் வைக்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.