டிஎன்பிஎஸ்சி நடத்திய ஜுனியர் இன்ஜினீயர் தேர்விலும் முறைகேடு.. அதிர்ச்சித் தகவல்கள்..

by எஸ். எம். கணபதி, Feb 7, 2020, 11:34 AM IST

டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டு நடத்திய பொறியாளர் தேர்வுகளிலும், வி.ஏ.ஓ. தேர்வுகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. 8 லட்சம், 10 லட்சம் கொடுத்தவர்களுக்குத்தான் அரசு வேலை கிடைத்துள்ளது மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, அந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த வழக்கில் இது வரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசாரணையில், ஏற்கனவே நடைபெற்ற குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்தது. குரூப்-2ஏ தேர்விலும் தரவரிசை பட்டியலில் முதல் 55 இடங்களுக்கு 30 இடங்களிலும், 100 இடங்களுக்குள் 37 இடங்களிலும் ராமேசுவரம் தேர்வு மையத்தில் எழுதியவர்கள் இடம்பிடித்திருந்தனர்.

இவர்களில் மாமல்லபுரத்தை சேர்ந்த திருக்குமரன், தற்போது குரூப்-4 தேர்வு முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்டதாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவரிடம் நடத்திய விசாரணையில், குரூப் 2ஏ முறைகேடு விவகாரத்தில், திருவண்ணாமலையை சேர்ந்த சுதாராணி, சென்னையை சேர்ந்த விக்னேஷ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதே போல், குரூப்4, குரூப்2 தேர்வுகளில் முறைகேடு செய்து பணிக்கு சேர்ந்தவர்கள், இடைத்தரகர்கள் பலர் கைது செய்யப்பட்டு வந்தனர். எனினும், இவற்றுக்கு எல்லாம் மூளையாக செயல்பட்டு பணம் வசூலித்த இடைத்தரகர் ஜெயக்குமாரும், அவருக்கு பணம் வசூலித்து கொடுத்த காவலர் சித்தாண்டியும் கைதாகமல் இருந்தனர். பின்னர், சித்தாண்டியும் கைதானார். அடுத்து ஜெயக்குமார் தானாக நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி கடந்த 6 ஆண்டுகளாக நடத்தி வந்த அத்தனை தேர்வுகளிலேயும் முறைகேடுகள் நடந்திருப்பதும், தகுதியற்றவர்கள் பல லட்சம் பணம் கொடுத்து அரசு வேலையில் சேர்ந்திருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
கடந்த ஆண்டு, அரசு துறைகளுக்கான ஒருங்கிணைந்த இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வு, 32 மையங்களில் நடந்தது. இதில், தேர்வான 33 பேரில் 28 பேர் ஒரே மையத்தில் தேர்வு எழுதியிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பத்து லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்து, தேர்வில் முறைகேடுகள் செய்திருக்கலாம் என விசாரணையில் தெரிய வருகிறது. அதனால், இது பற்றி தனியாக வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டியுள்ளதாக சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதே போல், குரூப் 2 தேர்வு முறைகேடு வழக்கில் இடைத்தரகராக செயல்பட்டு கைதான வி.ஏ.ஓ. ஒருவர் அளித்த வாக்குமூலத்தில் இன்னொரு திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது, கடந்த 2016ம் ஆண்டு 813 கிராம நிர்வாக உதவியாளர்(வி.ஏ.ஓ) பணியிடங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் தேர்வு நடத்தப்பட்டது. டி.என்.பி.எஸ்.சி நடத்திய இந்த தேர்வும் முறையாக நடத்தப்படவில்லை. இதிலும் பணம் கொடுத்து முறைகேடாக தேர்வு எழுதியவர்கள்தான் தேர்ந்தெடுக்கப்பட்டு வேலைக்கு சேர்ந்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. கைதான வி.ஏ.ஓ. இதை தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கிறார். தானே பணம் கொடுத்துதான் வி.ஏ.ஓ. ஆனதாக அவர் கூறியிருக்கிறார்.

இதையடுத்து, சி.பி.சி.ஐ.டி போலீஸ் அதிகாரிகள் தற்போது டிஎன்பிஎஸ்சி முறைகேடுகளை மட்டுமே விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைக்க முடிவு செய்துள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி ஊழல்கள் நீண்டு கொண்டே செல்வதால், இதன் விசாரணை முடிவடைய பல மாதங்கள் ஆகலாம். காரணம், கடந்த 2011ம் ஆண்டில் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த அத்தனை டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளிலுமே முறைகேடாகவே ஆட்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பார்கள் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து, இந்த தேர்வுக்காக விசேஷ பயிற்சிகள் பல முறை தேர்வு எழுதியும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.

You'r reading டிஎன்பிஎஸ்சி நடத்திய ஜுனியர் இன்ஜினீயர் தேர்விலும் முறைகேடு.. அதிர்ச்சித் தகவல்கள்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை