டெல்லியில் மீண்டும் ஆம்ஆத்மி.. கெஜ்ரிவால் 3வது முறை முதல்வர்..

by எஸ். எம். கணபதி, Feb 11, 2020, 13:44 PM IST

டெல்லியில் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. அரவிந்த் கெஜ்ரிவால் 3வது முறையாக முதலமைச்சராக பதவியேற்கிறார்.

டெல்லி சட்டமன்றத் தேர்தல் கடந்த 8ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி ஏற்பட்டது. எனினும், ஆட்சியைப் பிடிப்பதில் ஆம் ஆத்மிக்கும், பாஜகவுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவியது. வாக்கெடுப்புக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் எல்லாவற்றிலும் ஆம் ஆத்மி கட்சியே ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் என்றும் பாஜக அதிகபட்சம் 20 இடங்களை கைப்பற்றும் என்றும் கூறப்பட்டது. காங்கிரஸ் 3வது இடத்திற்கு தள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேர்தல் முடிந்து 20 மணி நேரத்திற்கு பின்பும் இறுதி கட்ட வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் அறிவிக்காமல் இருந்தது. இதையடுத்து, கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், தேர்தல் ஆணையத்தின் செயல் அதிர்ச்சியளிப்பதாக கூறியிருந்தார். இதன்பின், தேர்தல் கமிஷன் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், டெல்லி தேர்தலில் மொத்தம் 62.5 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், இது நாடாளுமன்றத் தேர்தலில் பதிவானதை விட 2 சதவீதம் அதிகம் என்றும் தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு மொத்தம் உள்ள 70 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. 21 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே ஆம்ஆத்மி கட்சியே அதிக இடங்களில் முன்னிலை வகித்தது.
ஆரம்பத்தில் 55 தொகுதிகளில் ஆம் ஆத்மியும், 15 தொகுதிகளில் பாஜகவும் முன்னிலை வகித்தன. இதன்பிறகு பாஜக சில தொகுதிகளில் முன்னுக்கு வந்தது. தற்போதைய நிலவரப்படி ஆம் ஆத்மி 58 இடங்களிலும், பாஜக 12 இடங்களிலும் தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றன.

மெஜாரிட்டிக்கு 36 தொகுதிகளை வென்றாலே போதும் என்ற போதும், ஆம் ஆத்மி 58 இடங்களை பிடித்துள்ளதால், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் 3வது முறையாக ஆட்சியமைப்பது உறுதியாகி விட்டது.

You'r reading டெல்லியில் மீண்டும் ஆம்ஆத்மி.. கெஜ்ரிவால் 3வது முறை முதல்வர்.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை