குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம்

by எஸ். எம். கணபதி, Feb 12, 2020, 12:37 PM IST

புதுச்சேரி சட்டமன்றத்தில் பாஜக உறுப்பினர்களின் எதிர்ப்பை மீறி, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் அறிமுகம் செய்யப்பட்டது.

புதுச்சேரி சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறக் கோரும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு பாஜகவைச் சேர்ந்த நியமன எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டசபையில் இந்த தீர்மானத்தை கொண்டு வரக் கூடாது என்று கோஷம் எழுப்பினர். தொடர்ந்து அவர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அப்போது அவர்கள், அரசியலமைப்பு சட்டத்தை காலால் மிதிக்கும் நாராயணசாமி அரசை கண்டிக்கிறோம் எழுதப்பட்ட பேனர்களை கையில் ஏந்தியபடி கோஷம் எழுப்பினர். சட்டமன்றத்திற்கு வெளியே அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, இந்த தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வர அனுமதிக்கக் கூடாது என்று அவர்கள் சபாநாயகரிடம் நேற்று கடிதம் கொடுத்திருந்தனர். கவர்னர் கிரண்படேியை சந்தித்தும் இதே போல் ஒரு கடிதம் கொடுத்திருந்தனர்.
கவர்னர் கிரண்பேடி, இந்த கடிதத்தை பெற்று கொண்டு, மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக விவாதிக்க புதுச்சேரி சட்டமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று குறிப்பிட்டு, முதலமைச்சர் நாராயணசாமிக்கு கடிதம் அனுப்பினார்.
இந்த கடிதத்தை சட்டமன்றத்தில் வாசித்த முதலமைச்சர் நாராயணசாமி, இந்த கடிதம் இப்போதுதான் எனக்கு வந்துள்ளது. இதை இப்போதுதான் வாசிக்கிறேன். இதில் ரகசியம் என்று போட்டு விட்டு, ஒரு நாள் முன்பே இதை ஊடகங்களுக்கு கவர்னர் அனுப்பியுள்ளார். மேலும், சமூக ஊடகங்களில் வெளியிட்டிருக்கிறார். அரசின் ரகசியத்தை வெளியிட்ட அவர் கவர்னர் பதவி வகிக்க தகுதியற்றவர் என்று கூறினார்.
இந்நிலையில், புதுச்சேரி சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் அறிமுகம் செய்யப்பட்டது.

You'r reading குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை