காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவை விடுவிக்கக் கோரி, அவரது சகோதரி சாரா அப்துல்லா பைலட் தாக்கல் செய்த வழக்கை விசாரிக்கும் அமர்வில் ஒரு நீதிபதி விலகினார். இதையடுத்து, இந்த மனு, வேறொரு அமர்வில் வரும் 14ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து அம்மாநிலத்தில் வன்முறை, போராட்டங்கள் நடைபெறாமல் பாதுகாப்பதற்காக இணையதளம் முடக்கம் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர்.
உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் சிறை வைக்கப்பட்டு, ஆறு மாதம் முடிவடைந்தது. இதையடுத்து, அவர்களை ஜம்மு காஷ்மீர் பொது அமைதி சட்டத்தின் கீழ் 2 ஆண்டு தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஏற்கனவே முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா இந்த சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சூழலில், உமர் அப்துல்லாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்யக் கோரி, அவரது சகோதரி சாரா அப்துல்லா பைலட், சுப்ரீம் கோர்ட்டில் ஹேபியஸ் கார்பஸ் மனுதாக்கல் செய்தார். இம்மனுவில், உமர் அப்துல்லா மீது பொது அமைதி சட்டத்தின் கீழ் உத்தரவு பிறப்பித்தது செல்லாது என்றும், அவர் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை என்றும் கூறப்பட்டது.
இம்மனு நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான 4 நீதிபதிகள் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதி மோகன் சந்தானகவுடர், தான் இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதையடுத்து, இந்த மனு, வேறொரு அமர்வு முன்பாக வரும் 14ம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.