கெஜ்ரிவால் முதல்வராக பிப்.16ல் பதவியேற்கிறார்.. ராம்லீலா மைதானத்தில் பதவியேற்பு விழா

by எஸ். எம். கணபதி, Feb 12, 2020, 11:59 AM IST

டெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 16ம் தேதி, ராம்லீலா மைதானத்தில் பதவியேற்று கொள்கிறார்.

டெல்லி சட்டமன்றத் தேர்தல் கடந்த 8ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி ஏற்பட்டது. எனினும், ஆட்சியைப் பிடிப்பதில் ஆம் ஆத்மிக்கும், பாஜகவுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கை நேற்று(பிப்.11) நடைபெற்றது. ஆம் ஆத்மி 62 தொகுதிகளிலும், பாஜக வெறும் 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.
புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுனில் யாதவை விட 21697 வாக்குகள் அதிகம் பெற்று வென்றார்.

இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காலையில் கவர்னர் அனில் பைஜாலை சந்தித்து, ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்துகிறார். இதில் அவர் முதலமைச்சராக தேர்வு செய்யப்படுகிறார்.

இதற்கிடையே, வரும் 16ம் தேதி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a reply