வெளிநாட்டு தூதர்கள் குழுவினர் இன்று ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து அம்மாநிலத்தில் வன்முறை, போராட்டங்கள் நடைபெறாமல் பாதுகாப்பதற்காக இணையதளம் முடக்கம் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றம்சாட்டி, இந்த பிரச்னையை ஐ.நா. வரை கொண்டு சென்றது பாகிஸ்தான். ஆனால், அந்நாட்டின் எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. மாறாக, இது இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை என்று சர்வதேச நாடுகள் ஒதுங்கிக் கொண்டன. எனினும், சில நாடுகள் இந்தியாவை குறை கூறின.
இதற்கிடையே, ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் ஏற்கனவே ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுப்பயணம் வந்து, அங்குள்ள நிலைமைகளை நேரில் கண்டறிந்தனர். அதே சமயம், ராகுல்காந்தி உள்பட எதிர்க்கட்சித் தலைவர்கள், ஜம்மு காஷ்மீருக்கு செல்ல முயன்ற போது அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதுவும் விமர்சனத்துக்கு உள்ளானது.
இந்த சூழலில், தற்போது வெளிநாட்டு தூதர்கள் குழுவினர் இன்று ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். இந்த பயணத்திற்கு ராணுவம் ஏற்பாடு செய்துள்ளது. அக்குழுவில் ஜெர்மனி, கனடா, ஆப்கனிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தூதர்கள் மற்றும் ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழுவினர் ஸ்ரீநகரில் ராணுவ அதிகாரிகளை சந்தித்து, காஷ்மீரின் தற்போதைய நிலைமைகளை கேட்டறிகின்றனர். பின்னர், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், வர்த்தகர்கள், மீடியா பிரதிநிதிகளை சந்தித்து பேசுகிறார்கள்.
ஐரோப்பிய யூனியனில் சமீபத்தில் இந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டு, தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், ஐரோப்பிய யூனியன் எம்பிக்கள், காஷ்மீருக்கு வருவது குறிப்பிடத்தக்கது.