மத்திய அரசின் முழு பலத்தையும் காட்டியும் டெல்லியில் ஆம் ஆத்மியின் துடைப்பத்தை பாஜகவால் வெல்ல முடியவில்லை என்று உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார்.
டெல்லி சட்டமன்றத் தேர்தல் கடந்த 8ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி ஏற்பட்டது. எனினும், ஆட்சியைப் பிடிப்பதில் ஆம் ஆத்மிக்கும், பாஜகவுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கை நேற்று(பிப்.11) நடைபெற்றது. ஆம் ஆத்மி 62 தொகுதிகளிலும், பாஜக 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
இந்நிலையில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள், பாஜக முதல்வர்கள் என்று பெரும் படையே பிரச்சாரம் செய்தும் கூட பாஜக வெறும் 8 தொகுதிகளில் வென்றது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவுடன் 30 ஆண்டுகளுக்கும் மேல் கூட்டணி வைத்திருந்து சமீபத்தில் அதை எதிர்த்து மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சியமைத்துள்ள சிவசேனாவும் கடுமையாக விமர்சித்துள்ளது. சிவசேனா தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே கூறுகையில், மக்கள் இப்போது பிரதமரின் மான் கி பாத்தை(மனதின் குரல்) விரும்பவில்லை. மாறாக, ஜன் கி பாத்(மக்களின் குரல்) என்று சொல்லும் வகையில் மக்களோடு இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால்தான் வெற்றி பெற்றிருக்கிறார். நாங்கள் மட்டும்தான் தேசியம் என்று சொல்லும் மத்திய அரசாங்கம் தனது எல்லா அதிகாரத்தையும் பயன்படுத்தியும், பலமான கட்சியான பாஜகவின் பெரும் தலைவர்கள் எல்லாம் பிரச்சாரம் செய்தும் அதனால் துடைப்பத்தை(ஆம் ஆத்மி சின்னம்) வெல்ல முடியவில்லை. கெஜ்ரிவாலை தீவிரவாதி என்றெல்லாம் சொல்லியும் வெல்ல முடியவில்லை. பாஜகவின் வெறுப்பு அரசியலை மக்கள் விரும்பவில்லை. வளர்ச்சிப் பணிகளை சொல்லி வெற்றி பெற்ற கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். சிவசேனாவைச் சேர்ந்த மாநில அமைச்சர்கள் சிலரும், பாஜகவின் வெறுப்பு அரசியல் இனி எடுபடாது என்று கடுமையாக விமர்சித்துள்ளனர்.