புதுடெல்லியில் வென்றதும் ஆஞ்சநேயர் கோயிலில் கெஜ்ரிவால் வழிபாடு

by எஸ். எம். கணபதி, Feb 12, 2020, 11:01 AM IST

புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட கெஜ்ரிவால், பாஜக வேட்பாளரை விட 21,697 வாக்குகள் அதிகம் பெற்று வென்றார்.

டெல்லி சட்டமன்றத் தேர்தல் கடந்த 8ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி ஏற்பட்டது. எனினும், ஆட்சியைப் பிடிப்பதில் ஆம் ஆத்மிக்கும், பாஜகவுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கை நேற்று(பிப்.11) நடைபெற்றது. ஆம் ஆத்மி 62 தொகுதிகளிலும், பாஜக வெறும் 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.

புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுனில் யாதவை விட 21697 வாக்குகள் அதிகம் பெற்று வென்றார்.

வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்ற பின்பு, முதல்வர் கெஜ்ரிவால் தனது குடும்பத்தினருடன், கன்னாட்பிளேஸ் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வழிபட்டார். அவருடன் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் சென்று, ஆஞ்சநேயரை வழிபட்டார்.


Leave a reply