காஷ்மீர் நன்றாக இருக்கிறது.. ஆப்கன் தூதரின் ட்விட் கிளப்பிய சர்ச்சை..

by எஸ். எம். கணபதி, Feb 13, 2020, 15:46 PM IST

ஜம்மு காஷ்மீரில் 25 வெளிநாட்டு தூதர்கள் இன்று 2வது நாளாக சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். அவர்களில் ஆப்கன் தூதர் போட்ட ட்விட் சர்ச்சையை கிளப்பி விட்டது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து அம்மாநிலத்தில் வன்முறை, போராட்டங்கள் நடைபெறாமல் பாதுகாப்பதற்காக இணையதளம் முடக்கம் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த பிரச்னையை சர்வதேசப் பிரச்னையாக்க பாகிஸ்தான் முயன்று, அது தோல்வியில் முடிந்தது. இது இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை என்று உலக நாடுகள் ஒதுங்கிக் கொண்டன. ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் அடங்கிய குழுவினர், கடந்த ஜனவரியில் ஜம்மு காஷ்மீருக்கு வந்து நிலைமைகளை நேரில் கேட்டறிந்தனர். அவர்களில் ஓரிருவர், தங்களை சுதந்திரமாக மக்களை சந்திக்க அனுமதிக்கவில்லை என்று அதிருப்தி தெரிவித்தனர்.

இதற்கிடையே, காஷ்மீருக்கு செல்ல முயன்ற ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். உள்நாட்டு தலைவர்களை அனுமதிக்காமல், வெளிநாட்டு குழுவினரை மட்டும் அழைத்து சென்று ஏமாற்றுவதா? என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இந்நிலையில், ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் 10 பேர் உள்பட 25 வெளிநாட்டு தூதர்கள் அடங்கிய குழுவினர், 2 நாள் சுற்றுப்பயணமாக காஷ்மீருக்கு நேற்று வந்தனர். காஷ்மீர் நிலவரத்தை நேரில் கண்டறிய அவர்களின் பயணத்திற்கு ராணுவம் ஏற்பாடு செய்திருந்தது. ஸ்ரீநகருக்கு நேற்று வந்த அவர்கள், ராணுவம் ஏற்பாடு செய்திருந்த உள்ளூர் அமைப்புகளை சேர்ந்த மக்களை சந்தித்து பேசினர். பின்னர், அவர்கள் தால் ஏரியில் படகுசவாரி சென்றனர்.

இந்நிலையில், ஆப்கன் தூதர் நயீம் தாஹர் காத்ரி ஒரு ட்விட் போட்டிருந்தார். அதில், காஷ்மீர் நன்றாக இருக்கிறது. வெனிஸ் நகர் போல் உள்ளது. காஷ்மீரி பெண் படகு ஓட்டினார். நிறைய படகு இல்லங்கள் இருக்கின்றன. கைவினைப் பொருட்கள் விற்கப்படுகின்றன. இந்த காஷ்மீர் பள்ளத்தாக்கு சுற்றுலாவை மேம்படுத்தக் கூடிய இடம் என்பதில் சந்தேகம் இல்லை என்று கூறியிருந்தார்.

இதற்கு சிலர், உங்களுக்கு மட்டும் எப்படி இன்டர்நெட் கிடைக்கிறது? எந்த வி.பி.என். சொல்லுங்க? என்பது போன்ற பதில்களை போட்டிருந்தனர். மெகபூபா முப்தி போட்டிருந்த ட்விட்டில், ஆக.5ம் தேதி முதல் இன்டர்நெட் இல்லை. பொருளாதார இழப்புகள். உள்ளூர் மீடியா நசுக்கப்படுகிறது. 3 முன்னாள் முதல்வர்கள் மீது கொடூரமான பொது அமைதி சட்டம் உள்பட பலர் சிறை வைப்பு, மாமூல் நிலைமை என்ற தோற்றம்.. இது போன்ற விஷயங்களை மத்திய அரசிடம் கேட்பீர்கள் என்று நம்புகிறேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், டொமினிக் குடியரசு தூதர் பிராங் ஹன்ஸ் டேனர்பர்க் போட்ட ட்விட்டில், காஷ்மீர் அழகான இடம். நாங்கள் இங்கு சுற்றுலாப்பயணிகளாக வந்துள்ளோம் என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் குழுவினர், பாரமுல்லா செல்வதாக இருந்தது. சீதோஷ்ண நிலை சரியில்லாததால் அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது. இன்று அவர்கள் ராணுவத்தினரிடம் காஷ்மீர் நிலைமைகள் குறித்து கேட்டு தெரிந்து கொள்ளவிருக்கின்றனர்.


Leave a reply