வங்காள நடிகரும், திரிணாமுல் கட்சியின் முன்னாள் எம்.பி.யுமான தபாஸ் பவுல் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 61.
வங்காள மொழி திரைப்பட நடிகர் தபாஸ் பவுல், மும்பையில் வசிக்கும் தனது மகளை பார்ப்பதற்காக சென்றிருந்தார். அங்கிருந்து நேற்று மாலையில் கொல்கத்தாவுக்கு திரும்பிச் செல்வதற்காக மும்பை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து, அவர் ஜுகுவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த தபாஸ் பவுலுக்கு இன்று அதிகாலை 4 மணியளவில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
தபாஸ் பவுலுக்கு மனைவியும் ஒரே மகளும் உள்ளனர். கடந்த 1980ம் ஆண்டில் தாதர் கீர்த்தி படத்தில் தொடங்கி, பல படங்களில் நடித்தவர். மேற்குவங்கத்தில் பிரபலமான நடிகரான இவர் பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் மேற்கு வங்கம் கிருஷ்ணாநகர் மக்களவை தொகுதியின் எம்.பி.யாக 2 முறையும், அலிப்போர் தொகுதி எம்.எல்.ஏ.வாக ஒரு முறையும் பதவி வகித்திருக்கிறார். கடந்த 2016ம் ஆண்டில் ரோஸ்வேலி சிட்பண்ட் மோசடி வழக்கில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டார். 13 மாதங்கள் கழித்து ஜாமீனில் விடுதலையானார். அந்த சமயத்தில் அவர் நடிப்பதை நிறுத்தி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.