விஜய்மல்லையா சொத்துக்களை முடக்கும் வழக்கு தள்ளி வைப்பு..

by எஸ். எம். கணபதி, Feb 18, 2020, 12:02 PM IST

விஜய்மல்லையா சொத்துக்களை முடக்கும் வழக்கின் விசாரணை மார்ச் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, மதுபானம், விமான சேவை உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்தவர். இவர் ஸ்டேட் பேங்க் உள்பட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் பெற்றிருந்தார். அந்த பணத்தை திருப்பிச் செலுத்தாமல் வெவ்வேறு தொழில்களில் முதலீடு செய்தார். வங்கிகள் அவரிடம் இருந்து பணத்தை பெறுவதற்காக வழக்குகள் பதிவு செய்த போது, லண்டனுக்கு தப்பி விட்டார்.

இதைத் தொடர்ந்து, இந்திய அரசு விடுத்த வேண்டுகோளின் பேரில், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரலில் பிரிட்டன் போலீசார் அவரை லண்டனில் கைது செய்தனர். விசாரணைக்கு பின் அவர் ஜாமீனில் விடப்பட்டார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு இந்திய அரசு முயற்சித்து வருகிறது.

இந்திய அரசு தொடர்ந்த வழக்கில் அவரை நாடு கடத்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து லண்டன் கோர்ட்டில் விஜய் மல்லையா மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே, விஜய் மல்லையாவை பொருளாதாரக் குற்றவாளி என்று அறிவித்து அவரது நிறுவனம் மற்றும் சொத்துக்களை முடக்குவதற்கு அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை எதிர்த்து விஜய் மல்லையா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு மல்லையா தரப்பில் தடை கோரப்பட்டது. தடை எதுவும் விதிக்காத நீதிமன்றம், வழக்கின் விசாரணையை மார்ச் மாதத்திற்கு தள்ளி வைத்தது.

You'r reading விஜய்மல்லையா சொத்துக்களை முடக்கும் வழக்கு தள்ளி வைப்பு.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை