முக்கிய தீர்ப்புகளை மக்கள் முழுமனதுடன் ஏற்றுள்ளார்கள்.. பிரதமர் மோடி பேச்சு

by எஸ். எம். கணபதி, Feb 22, 2020, 12:34 PM IST

சமீபத்தில் சில முக்கிய தீர்ப்புகள்(அயோத்தி வழக்கு உள்ளிட்டவை) வெளியாயின. அந்த தீர்ப்பு வரும் முன்பு கடும் விளைவுகள் ஏற்படும் என்று பேசப்பட்டது. ஆனால், 130 கோடி மக்களும் தீர்ப்பை முழுமனதுடன் ஏற்றுள்ளார்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

டெல்லியில் சர்வதேச நீதித்துறை மாநாடு இன்று(பிப்.22) காலை நடைபெற்றது. இதில், தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமை வகித்தார். அவர் பேசுகையில், பல்வேறு கலாச்சாரங்கள், பாரம்பரியங்களை ஒன்றிணைப்பது இந்தியா. வேறுபாடுகளில் ஒற்றுமை காண்பது இந்தியாவின் சிறப்பு. அதே போல், நீதி நிர்வாகத்தில் சிறப்பு வாய்ந்த வரலாறு பெற்றது இந்தியா. இங்கு நீதித்துறை நிறுவனங்கள் பல்வேறு காலகட்டங்களிலும் சிறந்த பணியாற்றி வந்துள்ளன என்றார்.

விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, மாநாட்டைத் தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், அனைவராலும் போற்றப்படும் மகாத்மா காந்தி தனது வாழ்வில் உண்மை மற்றும் சேவையில் முழு ஈடுபாடு கொண்டிருந்தார். எந்த நீதி நிர்வாகத்திற்கும் அடிப்படையாக இருப்பதே உண்மையும், சேவை மனப்பான்மையும்தான். காந்தி தனது சுயசரிதையில் தனது முதல் வழக்கு குறித்து விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

சமீபத்தில் இந்தியாவில் சில வெளியான தீர்ப்புகள் உலக அளவில் பேசுபொருளாக அமைந்துள்ளன. இந்த தீர்ப்புகள்(அயோத்தி வழக்கு உள்ளிட்டவை) வெளியாகும் முன்பாக, இவை மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று பேசப்பட்டது. ஆனால், இந்த தீர்ப்புகள் வெளியான போது 130 கோடி மக்களும் முழுமனதுடன் ஏற்றுக் கொண்டார்கள் என்று குறிப்பிட்டார்.


Leave a reply