மகாசிவராத்திரி விழா.. சிவாலயங்களில் சிறப்புப் பூஜைகள்..

by எஸ். எம். கணபதி, Feb 22, 2020, 12:24 PM IST

நாடு முழுவதும் மகா சிவராத்திரி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. சிவாலயங்களில் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றன.

மகா சிவராத்திரியையொட்டி மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில், கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோயில் என்று சென்னையில் உள்ள பிரபல சிவன் கோயில்களில் நேற்று இரவில் சிறப்பு அபிஷேகங்களும், விசேஷ பூஜைகளும் நடத்தப்பட்டன. பக்தர்கள் விடிய, விடியப் பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை, சிதம்பரம், தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், சேலம், நெல்லை பாளையங்கோட்டை, தூத்துக்குடி, ராணிப்பேட்டை தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் கோயில்களில் நடைபெற்ற மகா சிவராத்திரி சிறப்புப் பூஜைகளிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, விரதம் இருந்து சிவனைத் தரிசனம் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பக்தர்கள் பலரும் மகா சிவராத்திரி தினத்தில் 12 சிவன் கோவில்களுக்கு ஓட்டமும், நடையுமாகச் சென்று தரிசிப்பது வழக்கம். அப்போது அவர்கள், நமச்சிவாயா சொல்வதற்குப் பதில், கோவிந்தா, கோபாலா என்று ஸ்ரீமன் நாராயணனின் திருநாமத்தை உச்சரித்தவாறே செல்வார்கள். சிவனும், விஷ்ணுவும் ஒன்று என்ற அடிப்படையில் இந்த சிவாலய ஓட்டம் நடைபெறுகிறது. 12 சிவாலயங்களையும் வரிசையாகத் தரிசித்து வருவது இந்த சிவாலய ஓட்டத்தின் சிறப்பம்சமாகும்.

ராமேஸ்வரத்தில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று அதிகாலை 6 மணி வரை விசேஷ ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றன. முக்கிய வீதிகளில் தேரோட்டமும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்துச் சென்று சாமி தரிசனம் செய்தனர்.


Leave a reply